நாளை வாக்கு எண்ணிக்கை; புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு; காலை 11 மணி முதல் முடிவுகள் அறிவிப்பு..!
Tight security in Puducherry as vote counting takes place tomorrow
புதுச்சேரியில் நாளை காலை 08 மணிக்கு 04 பிராந்தியங்களில் பலத்த பாதுகாப்புடன் 06 இடங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் மூல வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. அதன்படி, காலை 11 மணி முதல் முடிவுகள் அறிவிப்படவுள்ளன.
எஸ்ஐஆர் திருத்தத்தின்போது புதுவையில், 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் மொத்தம் 9.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 தொகுதிகளிலும் 1099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. முதல் முறை வாக்காளர்கள் 24,919 பேர் இருந்தனர். இத்தேர்தலில் 294 பேர் 30 தொகுதிகளில் போட்டியிட்டனர்.
அந்தவகையில் இந்த புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த ஏப்ரல் 09-ஆம் நடந்த வாக்குப்பதிவில், வாக்குச் சாவடிகளில் வரலாறு காணாத வகையில் 89.87 சதம் வாக்குப் பதிவாயுள்ளன. மேலும், இதுவரையில் பதிவான 12,936 தபால் வாக்குகளையும் சேர்த்தால் 91.23 சதம் வாக்குகள் இந்தத் தேர்தலில் பதிவாகியுள்ளது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதுவையின் 04 பிராந்தியங்களிலும் 03 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. புதுவையில் 23 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரி, தாகூர் கலைக்கல்லுாரி, நேரு பாலிடெக்னிக் கல்லுாரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.
காரைக்கால் மாவட்டத்தில் 05 தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்திலும், மாஹேவில் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி, ஏனாமில் அரசு கலைக்கல்லுாரியிலும் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 08 மணிக்கு தொடங்கவுள்ளது.
புதுவையில் இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 166 டேபிள்களும், தபால் வாக்குளை எண்ணுவதற்கு 35 டேபிள்கள் என மொத்தம் 201 டேபிள்கள் போடப்பட்டுள்ளது. அத்துடன், வாக்கு எண்ணும் பணியில் 265 கண்காணிப்பாளர்கள், 315 உதவியாளர்கள், 279 பார்வையாளர்கள் என மொத்தம் 859 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
காலை 06.30 மணிக்கு பாதுகாப்பு அறையிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் முகவர் முன்னிலையில் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு வரப்படுகிறது. அடுத்து, முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி 08 மணிக்கு தொடங்குவதோடு, 08.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரிக்கும் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து 07 முதல் 14 வரை எண்ணிக்கை மேசைகள் ஒதுக்கப்படுகின்றன.
முதல்சுற்றாக மண்ணாடிப்பட்டு, ஊசுடு, வில்லியனுார், கதிர்காமம், தட்டாஞ்சாவடி, லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை, உப்பளம், நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம், ஏம்பலம், நெட்டப்பாக்கம், நெடுங்காடு, காரைக்கால் வடக்கு, நிரவி திருபட்டினம், மாஹே, ஏனாம் ஆகிய 17 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்த 17 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை முடியும் நேரம் குறித்து தேர்தல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி அதிகபட்சமாக மதியம் ஒரு மணிக்கு இந்த 17 தொகுதிகளின் முழுமையான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
அடுத்ததாக 02-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இந்த 02-வது சுற்றில் திருபுவனை, மங்கலம், உழவர்கரை, இந்திராநகர், காமராஜர் நகர், காலாப்பட்டு, ராஜ்பவன், உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை, மணவெளி, பாகூர், திருநள்ளாறு, காரைக்கால் தெற்கு ஆகிய 13 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெரும். 02-வது சுற்றின் வாக்கு எண்ணிக்கை முழு விபரம் மாலை 06 மணிக்கு வெளிவரும். முதல் 17 தொகுதிகளில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுபவர்கள் ஆட்சி அமைப்பதற்கான முன்னிலை விபரம் தெரியவரும்.
அதன்படி, நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால், நாளை மதுக்கடைகளை மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது. அத்துடன், புதுச்சேரியில் நகரம், புறநகர், கிராமப்புறங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். வெற்றி கொண்டாட்டத்தில் எந்த அசம்பாவிதமும் ஏற்படாதவகையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
English Summary
Tight security in Puducherry as vote counting takes place tomorrow