'ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இது ரொம்ப முக்கியம்'..! - மருத்துவக் கழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க டிடிவி தினகரன் அதிரடி கோரிக்கை...! - Seithipunal
Seithipunal


அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"தமிழகத்தில் மருத்துவக் கழிவுகள் திறந்தவெளிகளில் கொட்டப்படுவது, மருத்துவமனை வளாகங்களிலேயே கழிவுகள் தேங்கிக் கிடப்பது, உரிய காலத்தில் பாதுகாப்பான முறையில் அகற்றப்படாதது என தொடர்ந்து வெளியாகும் புகார்கள் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

இந்த அலட்சியமான நடைமுறை, பொதுச்சுகாதாரம் மட்டுமின்றி சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மற்றும் காற்றின் தரத்திற்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் மட்டும் நாளொன்றுக்கு சராசரியாக 6 ஆயிரம் கிலோ மருத்துவக் கழிவுகள் உருவாகின்றன.

ஆனால், இந்த 5 மாவட்டங்களின் கழிவுகளையும் சுத்திகரிக்கும் வகையில் விருதுநகரில் செயல்படும் ஆலையில் நாளொன்றுக்கு 2,800 கிலோ கழிவுகளை மட்டுமே சுத்திகரிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. அப்படியானால் மீதமுள்ள ஆயிரக்கணக்கான கிலோ மருத்துவக் கழிவுகள் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்ற கேள்வி எழுகிறது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரங்களின்படி, தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 60 டன் மருத்துவக் கழிவுகள் உருவாகின்றன.

இவற்றை பாதுகாப்பான முறையில் கையாள்வதற்குத் தேவையான அளவில் சுத்திகரிப்பு ஆலைகள் இல்லாததும், செயல்பாட்டில் உள்ள குறைந்த எண்ணிக்கையிலான ஆலைகளில் அனைத்து வகையான மருத்துவக் கழிவுகளையும் முழுமையாக சுத்திகரிக்கும் வசதிகள் இல்லாததுமே, ஆங்காங்கே மருத்துவக் கழிவுகள் சட்டவிரோதமாகக் கொட்டப்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக பொதுநல ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாவட்ட வாரியாக உருவாகும் உயிரி மருத்துவக் கழிவுகளின் அளவைக் கணக்கிட்டு, அதற்கேற்ப அவற்றை முறையாக மேலாண்மை செய்யப்படுகிறதா என்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், மருத்துவக் கழிவுகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுநல ஆர்வலர்கள் எழுப்பும் கேள்விகளுக்குக்கூட உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

எனவே, பொதுமக்களின் உயிர், உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முதன்மையாகக் கருத்தில் கொண்டு, விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அப்பால் பொருத்தமான இடங்களைத் தேர்வு செய்து மாவட்டந்தோறும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க வேண்டும்.

மேலும், அவற்றின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிக்க தனிக்குழுக்களை அமைத்து, விதிமீறல்கள் நடைபெறாத வகையில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்" என டிடிவி தினகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

This very important every district TTV Dhinakaran call action put end medical waste


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->