உதயநிதி, சபரீசன், கனிமொழி போட்ட ‘மெகா ப்ளான்’? திமுகவில் சீனியர்களுக்கு செக்.. ஸ்டாலின் அமைத்த 10 பேர் குழுவின் பின்னணி! - Seithipunal
Seithipunal


திமுகவின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கழக மறுசீரமைப்பு ஆலோசனைக் குழுவை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார். ஏற்கனவே சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிய கள ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் அறிக்கைகள் தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய மறுசீரமைப்புக் குழு அமைக்கப்பட்டிருப்பது கட்சிக்குள் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

"கள ஆய்வுக் குழுவின் அறிக்கைகள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? எந்த ஆக்சனும் இல்லாமல் தொடர்ந்து குழுக்களை அமைப்பது மட்டுமே கட்சியின் பிரச்சினைகளுக்குத் தீர்வாகுமா?" என்ற கேள்விகள் திமுக நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த மறுசீரமைப்புக் குழு வெறும் கண்துடைப்பு நடவடிக்கை அல்ல என்றும், கள ஆய்வுக் குழுக்கள் அளித்த அறிக்கைகளின் அடிப்படையில் கட்சிக்குள் முக்கிய மாற்றங்களை மேற்கொள்வதற்காகவே இந்தக் குழுவை ஸ்டாலின் அமைத்துள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னணியில் அண்மையில் நடைபெற்ற முக்கிய சந்திப்பு ஒன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. வெளிநாட்டுப் பயணங்களை முடித்துக்கொண்டு உதயநிதி ஸ்டாலின், சபரீசன் மற்றும் கனிமொழி ஆகியோர் சமீபத்தில் சென்னை திரும்பினர். அதன்பிறகு மூவரும் ஒரே நேரத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து நீண்ட ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மைக்காலத்தில் உதயநிதி, சபரீசன், கனிமொழி ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் ஸ்டாலினை சந்திப்பது அரிதான நிகழ்வாகக் கருதப்பட்ட நிலையில், அந்த ஆலோசனையில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், தவெக அரசு, திமுக கூட்டணியில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் கட்சியின் தேர்தல் தோல்வி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, தவெக ஆட்சி அமைந்த விதம் மற்றும் முன்னாள் கூட்டணிக் கட்சிகள் எடுத்த முடிவுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க திமுகவின் முன்னாள் கூட்டணிக் கட்சிகள் முன்வந்தபோது, அதனை தடுக்காமல் விட்டது அரசியல் ரீதியாக தவறான முடிவாக அமைந்துவிட்டதாக உதயநிதி கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

"ஆளுநர் ஆட்சி வந்தாலும் பரவாயில்லை, மீண்டும் தேர்தல் வந்தாலும் பரவாயில்லை என்ற நிலைப்பாட்டில் நாம் இருந்திருக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகள் தவெக அரசை வெளியில் இருந்து ஆதரிப்பதையோ, ஆட்சியில் பங்கேற்பதையோ நாம் விரும்பியிருக்கக் கூடாது" என்ற கருத்தை உதயநிதி முன்வைத்ததாக அறிவாலய வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதற்கு பதிலளித்த ஸ்டாலின், ஆளுநர் ஆட்சி என்பது மறைமுகமாக பாஜக ஆட்சியைப் போன்ற சூழலை உருவாக்கும் என்ற அச்சம் திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இருந்ததாக விளக்கியதாகக் கூறப்படுகிறது.

"ஒருமுறை ஆட்சி அதிகாரம் பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டால், அதிலிருந்து மீள்வது கடினமாகிவிடும் என்ற அச்சம் நமக்கு மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளுக்கும் இருந்தது. அதனால்தான் அவர்கள் தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்கலாம் என்று கூறியபோது நாம் தடுக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் மட்டும் நம்மிடம் ஆலோசிக்காமலேயே தவெக பக்கம் சென்றது" என்ற கருத்தை ஸ்டாலின் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இதன்பிறகு திமுகவின் தேர்தல் தோல்வி மற்றும் கட்சிக்குள் நடந்ததாகக் கூறப்படும் உள்ளடி வேலைகள் குறித்து விவாதம் திரும்பியதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் தோல்விக்கு எதிர்க்கட்சிகளின் வியூகங்கள் மட்டுமல்லாமல், திமுகவின் சில நிர்வாகிகளே கட்சிக்கு எதிராக செயல்பட்டதும் முக்கிய காரணம் என்று சபரீசன் சுட்டிக்காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

"கூட்டணிக் கட்சிகள் ஒத்துழைக்காமல் போனதை விட்டுவிடலாம். ஆனால் திமுக நிர்வாகிகளே கட்சிக்கு எதிராக வேலை செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து கள ஆய்வுக் குழுக்கள் விரிவான அறிக்கைகளை அளித்துள்ளன. அந்த அறிக்கைகளின் அடிப்படையில் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் மீண்டும் நம்பிக்கை ஏற்படும். வரவிருக்கும் இடைத்தேர்தல்களிலும் அதன் தாக்கம் தெரியும்" என்று சபரீசன் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கட்சியில் தலைமுறை மாற்றம் குறித்தும் விவாதம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவறு செய்த மற்றும் கட்சிக்கு எதிராக செயல்பட்ட சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு, இளைஞர்களுக்கு அதிக பொறுப்புகளை வழங்க வேண்டும் என்று உதயநிதி வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

"இது Gen Z தலைமுறை உருவாகியுள்ள காலம். இளைஞர்களை அரசியல்மயப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. திமுகவின் கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை அனைத்து நிலைகளிலும் இளைஞர்களுக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும்" என்ற கருத்தை அவர் முன்வைத்ததாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், சீனியர்களை முழுமையாக ஓரங்கட்டுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று கனிமொழி கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

"கட்சியின் மூத்த தலைவர்களை ஒரே நேரத்தில் புறக்கணிக்க முடியாது. அவர்களின் அதிகாரம் முழுமையாகப் பறிக்கப்பட்டால், அவர்கள் வேறு அரசியல் பாதையைத் தேடுகிறார்களோ இல்லையோ, அவர்களை நம்பியுள்ள நிர்வாகிகள் மாற்று வாய்ப்புகளைத் தேடக்கூடும். எனவே சீனியர்களை முழுமையாக ஒதுக்காமல், அதேநேரத்தில் இளைஞர்களுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கும் வகையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்" என்று கனிமொழி ஆலோசனை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த அணுகுமுறையில் ஸ்டாலின், உதயநிதி மற்றும் சபரீசன் ஆகியோருக்கும் உடன்பாடு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்பிறகே, கள ஆய்வுக் குழுக்கள் அளித்த அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு, கட்சியின் அனைத்து நிலைகளிலும் என்ன மாதிரியான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை ஆய்வு செய்ய தனிக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 10 பேர் கொண்ட மறுசீரமைப்பு ஆலோசனைக் குழுவை அறிவித்துள்ளார்.

இந்தக் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அர. சக்கரபாணி, எஸ்.எஸ். சிவசங்கர், தமிழரசி ரவிக்குமார், எம்.எம். அப்துல்லா, இ. பரந்தாமன், ச. முரசொலி, டாக்டர் எழிலன் மற்றும் எஸ்.கே.பி. கருணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு, திமுக மாவட்டங்களின் மறுவரையறை, மாவட்டச் செயலாளர்களின் எல்லைகளை மாற்றியமைப்பது, கட்சியின் சார்பு அணிகளை மறுசீரமைப்பது, பல்வேறு பணிக்குழுக்களின் செயல்பாடுகளை மாற்றியமைப்பது மற்றும் தேர்தல் பணிகளுக்காக நிரந்தர அமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்ய உள்ளது.

குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் திமுகவில் பல முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், இந்த 10 பேர் குழு வெறும் ஆலோசனைக் குழுவாக மட்டுமே இருக்குமா அல்லது தேர்தல் தோல்விக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முதல் கட்டமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு திமுக நிர்வாகிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

"இந்த முறை அறிக்கை மட்டும் வாங்கி வைத்துக்கொள்ள மாட்டார்கள். குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகு நிச்சயம் தலைவர் அதிரடி நடவடிக்கை எடுப்பார்" என்று அறிவாலய வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

திமுகவில் சீனியர்களின் அதிகாரம் குறைக்கப்படுமா, இளைஞர்களுக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்படுமா, மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவார்களா, தேர்தலில் கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை பாயுமா என்பதுதான் தற்போது திமுகவின் அடுத்தகட்ட அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The mega plan hatched by Udhayanidhi Sabareesan and Kanimozhi A check on DMK seniors the backstory of the 10 member committee formed by Stalin


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->