தமிழ்நாட்டு மக்கள் எதிர்கொள்ளக் கூடிய பிரச்சினைகள் தொடர்பாக கூட்டாக செயல்படுவதென 12 கொண்ட இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கம்..!
The Left coordination committee has been formed to act jointly on issues facing the people of Tamil Nadu
தமிழ்நாட்டு மக்கள் எதிர்கொள்ளக் கூடிய முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக கூட்டாக செயல்படுவதென இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆகிய இடதுசாரிகள் கட்சிகள் முடிவு செய்து, பொதுவான வேலை திட்டத்தை உருவாக்க 12 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இடதுசாரி கட்சிகள் வெளியிட்ட கூட்டறிக்கை விவரம் கீழ்வருமாறு;
''இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (ஜூன் 17) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்தக் கூட்டத்தில் இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் வளர்ச்சிப் போக்குகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டு மக்கள் எதிர்கொள்ளக் கூடிய முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக மூன்று இடதுசாரிக் கட்சிகளும் கூட்டாக செயல்படுவதென முடிவு செய்யப்பட்டது.
வர்க்க, வெகுமக்கள் அமைப்புகளின் ஒருங்கிணைந்த மேடையை உருவாக்குவது எனவும், இளைஞர், மாணவர், மாதர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவிற்கு, மக்களின் முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து பொதுவான வேலை திட்டத்தை உருவாக்குவது என முடிவு செய்யப்பட்டது. 12 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மு.வீரபாண்டியன், டி.எம்.மூர்த்தி, நா. பெரியசாமி, எம். ரவி ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெ.சண்முகம், பி.சம்பத், என்.குணசேகரன், கே.சாமுவேல்ராஜ் ஆகியோரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை சார்பில் பழ. ஆசைத்தம்பி, பாலசுந்தரம், சந்திரமோகன் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர். இக்கட்சி சார்பில் மற்றொருவர் பின்னர் இணைக்கப்படுவார். ஒருங்கிணைப்புக் குழுவிற்கான செயல்திட்டத்தை தயாரித்து அடுத்தக் கூட்டத்தில் ஒப்புதல்களுக்காக முன்வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

ஜூலை மாதம் 20-ஆம் தேதி இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் அடுத்தக் கூட்டத்தை நடத்துவது என்றும், இடதுசாரி கட்சிகளின் வர்க்க - வெகுமக்கள் அமைப்புகளின் விரிவடைந்த கூட்டத்தை ஜூலை 10 ஆம் தேதி சென்னையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
குறைந்த பட்ச செயல் திட்டம் மற்றும் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் மாதம் இறுதியில், இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் பிரம்மாண்டப் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக்குழு என்பது தேர்தலுக்கான கூட்டணி அல்ல. மக்கள் பிரச்சினைகளுக்கு போராடுவதற்கான, தமிழ்நாட்டின் எதிர்கால திசை வழியை இடதுசாரிகளின் பக்கம் திருப்புவதற்கான, மாற்று அரசியல் திசைவழியைப் பற்றி விழிப்புணர்வு ஊட்டுவதற்கான இயக்கமாகும்.
இன்றைய முதலாளித்துவ சமூகப் பொருளாதார அமைப்புக்கு மாற்று சோசலிசம் தான் என்ற நம்பிக்கையை உருவாக்கும் வகையில் இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு செயல்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
The Left coordination committee has been formed to act jointly on issues facing the people of Tamil Nadu