ஆட்சியில் பங்கு குறித்து மாறி மாறி விமர்சிக்கும் கட்சியினர்; தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் கொடுத்துள்ள பதில்..!
The Congress party response to the DMK regarding the demand for a share in power
'சட்டசபை தேர்தல் என்பதால்தான் ஆட்சியில் பங்கு கேட்கிறோம்' என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு, காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளது. இந்நிலையில், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுமா அல்லது வெளியேறுமா என்ற குழப்பம் உருவாகியுள்ளது. தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டுமானால், 41 தொகுதிகள், மூன்று அமைச்சர்கள், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி வேண்டும் என, காங்கிரஸின் டில்லி மேலிடம் எதிர்பார்க்கிறது.
இந்த சூழலில் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க., உடன் கூட்டணி அமைக்கவும், காங்கிரஸ் ரகசிய பேச்சு நடத்தி வருகிறது. இதில், ராகுலுக்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரவீன் சக்கரவர்த்தி, விஜயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அத்துடன், தமிழக அரசை உ.பி., அரசுடன் ஒப்பிட்டும் சமூக வலைதளத்தில் விமர்சித்து கருத்து பதிவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் அவரை கடுமையாக விமர்சித்த நிலையில், அதற்கு மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்தார்.அதாவது, 'கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாராலும் வெற்றி பெற முடியாது' என்ற கருத்தை வெளியிட்டார்.
இதற்கு தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பதிலளிக்கையில், 'காங்கிரசில் இருந்து யார் பேசினாலும், தி.மு.க.,வில் இருந்து யார் பேசினாலும் அது தனிப்பட்ட கருத்துதான். லோக்சபா தேர்தல் முடிந்துவிட்டது என்பதால் மாணிக்கம் தாகூர் பேசுகிறார். எந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும் இது போன்று பேசவில்லை. கடந்த 2019-ஆம் ஆண்டு பார்முலாவின்படி நாங்கள் நடக்கிறோம். இந்த தேர்தலிலும் இரு சகோதரர்கள் எடுக்கும் முடிவுதான். எதுவென்றாலும், அது முதல்வர் ஸ்டாலினும், ராகுலும் இறுதி முடிவு எடுப்பர்' என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் சட்டசபை தலைவர் ராஜேஷ்குமார், ஆட்சியில் பங்கு கேட்டு பேசிய பதிவுகளை, மாணிக்கம் தாகூர் தன் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டதோடு, ஆர்.எஸ்.பாரதியின் கருத்துக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: 'லோக்சபா தேர்தல் முடிந்து விட்டது. ஆட்சியில் பங்கு குறித்து எம்.எல்.ஏ., யாரும் கேட்கவில்லை என்பது சரியான கூற்று அல்ல. லோக்சபா தேர்தலில், மாநில ஆட்சியில் பங்கு கேட்பது பொருத்தமற்றது. பாடத்திட்டத்திற்கு வெளியே கேள்வி கேட்பது போல் உள்ளது. சட்டசபை தேர்தல் என்பதால் தான், ராஜேஷ்குமார் போன்றோர் ஆட்சியில் பங்கு கேட்கின்றனர்' எனக் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, தி.மு.க.,வினர் அவரை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
English Summary
The Congress party response to the DMK regarding the demand for a share in power