டெல்லியில் அமித் ஷாவிடம் காட்டிய அந்த லிஸ்ட்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! கூட்டணி கணக்கில் திருப்புமுனையா?
That list shown to Amit Shah in Delhi Edappadi Palaniswami shocked Is it a turning point in the alliance tally
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது தேர்தல் வியூகங்களை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இருப்பது தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் தேர்தலில் திமுகவை தோற்கடிப்பதே முக்கிய இலக்காக இருந்தாலும், அதிமுக தனது கூட்டணியில் மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. 234 தொகுதிகள் கொண்ட சட்டமன்றத்தில் சுமார் 170 தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிட வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் முக்கிய திட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது. மீதமுள்ள தொகுதிகள் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக தரப்பில் சுமார் 30 தொகுதிகள் மற்றும் பாமக தரப்பில் 17 தொகுதிகள் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படும் நிலையில், இந்த தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள இழுபறிகளை தீர்க்கவே இந்த டெல்லி பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், சின்னம் தொடர்பான விவகாரமும் கூட்டணிக்குள் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று பாஜக விரும்புவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் தனது வாக்கு சதவீதத்தை உயர்த்த வேண்டும் என்பதே அந்தக் கட்சியின் நோக்கமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் இதற்கு எதிராக, சிறிய கட்சிகள் அனைத்தும் அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி வருகிறார். குறிப்பாக கிராமப்புறங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு அதிக செல்வாக்கு இருப்பதால் அதுவே வெற்றிக்கு உதவும் என்று அவர் நம்புகிறார்.
இதனால், இந்த டெல்லி சந்திப்பு வெறும் தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனை மட்டுமல்ல; அதிமுக தனது அரசியல் அடையாளத்தையும் செல்வாக்கையும் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
கடந்த தேர்தல்களில் இழந்த ஆதரவை மீட்டெடுக்க அதிக தொகுதிகளில் போட்டியிடுவது அதிமுகவிற்கு அவசியமாக உள்ள நிலையில், தமிழகத்தில் தனது நிலையை வலுப்படுத்த விரும்பும் பாஜக எவ்வளவு சமரசம் செய்யும் என்பதும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இன்று நடைபெறும் அமித் ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு முடிவில், பல வாரங்களாக நீடித்து வரும் தொகுதி பங்கீடு மற்றும் சின்னம் தொடர்பான விவகாரங்களுக்கு தீர்வு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த முடிவே வரவிருக்கும் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியின் அரசியல் வலிமையை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
English Summary
That list shown to Amit Shah in Delhi Edappadi Palaniswami shocked Is it a turning point in the alliance tally