ஆளே இல்லாத கட்சிக்கு 10 சீட்டு!கிளையே இல்லாத கட்சிக்கு 8 சீட்டு! விசிக, தேமுதிகவுக்கு திமுக அதிக சீட் கொடுத்ததை விமர்சித்த வைகோ!
Ten seats for a party with no real presence Eight seats for a party with no organizational structure Vaiko criticized the DMK for allocating so many seats to the VCK and DMDK
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, சில கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும், மதிமுக உரிய அங்கீகாரம் பெறவில்லை என்றும் அவர் கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அருப்புக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைகோ, கட்சிகளின் பெயர்களை நேரடியாக குறிப்பிடாமல், திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு முடிவுகளை விமர்சித்தார்.
“காணாமல் போகக்கூடிய நிலையில் இருந்த ஒரு கட்சிக்கு 10 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டது. பல பகுதிகளில் அமைப்பே இல்லாத மற்றொரு கட்சிக்கு 8 தொகுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் எங்கள் கட்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “சுயமரியாதையையும் தன்மானத்தையும் கொஞ்சம் இழந்துவிட்டுத்தான் திமுக கூட்டணியில் பயணித்தோம். திமுகவை என்னைப் போல் உயர்த்திப் பேசிய தலைவர் வேறு யாரும் இருக்க முடியாது. ஆனால் 9 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தும் எங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை,” என்றார்.
தவெக குறித்து பேசிய வைகோ, “விஜய் இன்னும் சில மாதங்களில் முழுமையாக அரசியல் ரீதியாகத் தயாராகிவிடுவார். அவரிடம் கருத்தும் இருக்கிறது, காரமும் இருக்கிறது,” என்று குறிப்பிட்டார்.
மேலும், “தவெகவுடன் சேர்வதற்காக ரூ.50 கோடி பேரம் பேசியதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யானது. எனக்கு பணத்தின் மீது ஆசை கிடையாது. நமது கட்சியின் சோதனைக் காலம் முடிந்துவிட்டது. பனிக்காலம் முடிந்து வசந்தகாலம் வரப்போகிறது. தொண்டர்களின் மனக்காயங்களுக்கு மருந்திடும் வகையில் பொதுக்குழுவில் நல்ல முடிவு எடுக்கப்படும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் விலகியுள்ள நிலையில், மதிமுகவும் தனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் முக்கிய முடிவை அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.
English Summary
Ten seats for a party with no real presence Eight seats for a party with no organizational structure Vaiko criticized the DMK for allocating so many seats to the VCK and DMDK