"தமிழ்நாடே… தலைப்புச் செய்திக்கு ready-ஆ?" - திமுக தேர்தல் அறிக்கை வெளியீட்டிற்கு முன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!
Tamil Nadu Ready for the Headline CM MK Stalin Teases DMK Election Manifesto Release
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு சிறிய பதிவு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பைத் தொற்றியுள்ள ட்வீட்:
தனது எக்ஸ் (X) தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், "தமிழ்நாடே… தலைப்புச் செய்திக்கு ready-ஆ?" என்ற கேள்வியுடன் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் "வெல்லட்டும் திராவிட மாடல்" என்ற முழக்கத்துடன் #DMKManifesto2026 என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுத் தொண்டர்களை உற்சாகப்படுத்தியிருந்த நிலையில், இன்று வெளியாகவுள்ள இந்தத் தேர்தல் அறிக்கை, தேர்தலின் "ஹீரோ"வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும்":
நேற்று திமுகவின் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டபோது பேசிய ஸ்டாலின், "நாங்கள் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவோம்" என்று குறிப்பிட்டிருந்தார். 26 கட்சிகள் கொண்ட மெகா கூட்டணியை வழிநடத்துவதால் ஏற்பட்ட காலதாமதத்தைத் தனது பாணியில் சுட்டிக்காட்டிய அவர், இன்று வெளியிடப்படவுள்ள வாக்குறுதிகள் மக்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சும் வகையில் அமையும் என்பதைத் தனது ட்வீட் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
எதிர்பார்ப்புகளும் சவால்களும்:
முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹10,000 உதவித்தொகை, இலவசப் பிரிட்ஜ் உள்ளிட்ட 297 கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வெளியிட்டிருந்தார். இதற்குப் பதிலடியாகவும், திராவிட மாடல் ஆட்சியின் தொடர்ச்சியாகவும் திமுக எத்தகைய புதிய நலத்திட்டங்களை அறிவிக்கும் என்பதே தற்போதைய பிரதான கேள்வி. குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளை மையமாகக் கொண்ட "தலைப்புச் செய்தியாக" மாறப்போகும் அந்த அறிவிப்புகள் என்னவாக இருக்கும் எனத் தமிழகமே ஆவலுடன் காத்திருக்கிறது.
ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள ஒற்றைக்கட்டத் தேர்தலுக்கு முன்னதாக, இன்று மாலை வெளியாகவுள்ள இந்த அறிக்கை, திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் ஒரு முக்கியக் கருவியாகப் பார்க்கப்படுகிறது.
English Summary
Tamil Nadu Ready for the Headline CM MK Stalin Teases DMK Election Manifesto Release