தமிழக அமைச்சரவை விரிவாக்கம்? காங்கிரஸுக்கு 2, அதிமுக எஸ்பி வேலுமணி அணிக்கு 5 அமைச்சர் பதவி என தகவல்!
Tamil Nadu cabinet expansion 2 ministerial posts for Congress 5 for AIADMK SP Velumani team
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு அமைந்ததையடுத்து, அடுத்தகட்டமாக அமைச்சரவை விரிவாக்கம் குறித்த பரபரப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் மற்றும் அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி அணிக்கு அமைச்சரவைப் பதவிகள் ஒதுக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு சில முக்கியத் துறைகள் இன்னும் ஒதுக்கப்படாத நிலையில், விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பத்திரப்பதிவு, போக்குவரத்து, இந்து சமய அறநிலையத்துறை, வீட்டுவசதி, உயர்கல்வி, கூட்டுறவு போன்ற முக்கிய இலாக்காக்கள் இன்னும் காலியாக உள்ளன.
இந்த நிலையில், தவெக அரசுக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், “காங்கிரஸுக்கு இரண்டு அமைச்சரவை இடங்கள் கிடைக்கும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வரும் எஸ்.பி. வேலுமணி – சி.வி. சண்முகம் அணிக்கும் முக்கிய பங்கு கிடைக்கலாம் என்ற பேச்சு நிலவுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் மூலம் விஜய் அரசு பெரும்பான்மையை உறுதி செய்தது.
இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியடைந்து, தவெக அரசுக்கு ஆதரவாக இருந்ததாக கூறப்படும் 28 மாவட்டச் செயலாளர்களை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கியிருந்தார். இந்த நடவடிக்கை அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பிளவை தீவிரப்படுத்தியுள்ளது.
ஆனால், எஸ்.பி. வேலுமணி தரப்பு தொடர்ந்து தவெக ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியும், “அதிமுக அணிக்கு அமைச்சரவை வாய்ப்பு குறித்து பேச்சுவார்த்தை நடந்தது உண்மை” என்று மறைமுகமாக உறுதி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், விரைவில் நடைபெறவுள்ள அமைச்சரவை விரிவாக்கத்தில் காங்கிரஸ் மட்டுமின்றி, அதிமுகவில் இருந்து பிரிந்த வேலுமணி அணிக்கும் இடமளிக்கப்படும் என்ற அரசியல் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது தமிழக அரசியலில் புதிய கூட்டணி அரசியல் சமன்பாட்டை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tamil Nadu cabinet expansion 2 ministerial posts for Congress 5 for AIADMK SP Velumani team