''சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்களைத் தரக்குறைவாக இழிவுபடுத்தும் விளம்பரங்கள்''; சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்..!
Su Venkatesan MP condemns advertisements at Chennai Metro stations that demean women
''சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களுக்கு உள்ளே வைக்கப்பட்டுள்ள சில விளம்பரங்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் நாகரிக சமூகத்திற்கு எதிரானதாகவும் உள்ளன; பெண்களைத் தரக்குறைவாக நடத்தும் மற்றும் அவர்களை வெறும் பொருளாகச் சித்தரிக்கும் இந்த விளம்பரம் கடும் கண்டனத்துக்குரியது;'' மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சிறப்பான பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்கி வரும் அதேவேளையில், அதன் நிலையங்கள் மற்றும் ரயில்களுக்கு உள்ளே வைக்கப்பட்டுள்ள சில விளம்பரங்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் நாகரிக சமூகத்துக்கு எதிரானதாகவும் உள்ளன.
குறிப்பாக, மெட்ரோ ரயிலுக்குள் வைக்கப்பட்டுள்ள ஒரு நிதி நிறுவனத்தின் விளம்பரத்தில், “பெண் நண்பர் (Girlfriend) 0% வட்டி தரலாம்...” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய விளம்பரம் பெண்களின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் கேள்விக்குள்ளாக்குவதுடன், ஆழமான ஆணாதிக்க மனப்பான்மையையும் பிரதிபலிக்கிறது.
பெண்களைத் தரக்குறைவாக நடத்தும் மற்றும் அவர்களை வெறும் பொருளாகச் சித்தரிக்கும் இந்த விளம்பரம் கடும் கண்டனத்துக்குரியது.
மெட்ரோ ரயில் நிர்வாகம் இத்தகைய விளம்பரத்தை எப்படி அனுமதித்தது என்பது கேள்விக்குரியது. இந்த விளம்பரத்தை உடனடியாக அகற்றுமாறும், இதனை காட்சிப்படுத்த அனுமதிக்கப்பட்டதற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Su Venkatesan MP condemns advertisements at Chennai Metro stations that demean women