நேபாள பெருவெள்ளம்; 10 நாட்களுக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்ட இரண்டு பேர்; சுரங்கப்பாதையில் மந்திரங்களைச் சொல்லிக்கொண்டு இருந்த மீட்கப்பட்டவர்..!
Two rescued safely after 10 days in Nepal floods
கடந்த ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக பேரழிவு ஏற்பட்டது. போட்டேகோஷி ஆற்றில் பெருக்கெடுத்த திடீர் வெள்ளம் கரையோரங்களில் இருந்த பல கிராமங்களையும் நகரங்களையும் அடித்துக்கொண்டு சென்று பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில், நேபாள மக்களும், கயிலாய யாத்திரைக்காகச் சென்ற வெளிநாட்டவர்களும் சிக்கிக் கொண்டனர். வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நேபாள ராணுவம், காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினரும் அவர்களுடன் இணைந்து களத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேபாள ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில்
வெளிநாட்டவர் ஒருவரை மீட்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் சுரங்கப்பாதையில் இருந்து பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டு அழைத்து வரப்படும் அந்த நபர், உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். ஹெலிகாப்டரில் இருக்கும்போதே அந்த நபரை மருத்துவர் ஒருவர் பரிசோதிக்க போடுவதுபோல உள்ளது.

அதேப்போன்று, நேபாள போலீஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு ஒன்றில், நுவாகோட் பகுதியில் இருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. நுவாகோட் மாவட்டத்தின் பெட்ராவதி பகுதியில் இருந்து அவர் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் திரிசூலி நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதையிலிருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட கபீர் மஹர்ஜன் மற்றும் சஞ்சய் ஷா ஆகியோர், உடனடியாக காத்மாண்டுவில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மீட்கப்பட்டவர்களில் ஒருவரான சஞ்சய் ஷா பேசுகையில்; ''சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த நேரத்தில் நான் மந்திரங்களைச் சொல்லிக்கொண்டு இருந்தேன். சுரங்கப்பாதைக்குள் இன்னும் மூன்று அல்லது நான்கு பேர் உயிருடன் இருக்கக்கூடும். ஆழமான பகுதிகளில் இன்னும் கூடுதல் நபர்கள் இருக்கலாம்.''என தெரிவித்துள்ளார்.
போட்டேகோஷி ஆற்றுப் பகுதியில் அமைந்திருந்த ஏராளமான நிர்மின் திட்ட சுரங்கப்பாதைகளில் சுமார் 900 பேர் சிக்கிக்கொண்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளதை அடுத்து அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்று 11-வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பல உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,344 ஆக உயர்ந்துள்ளது.
இதில் காணாமல்போன 4,898 பேரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அத்துடன், வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 13,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், 500-க்கும் அதிகமான உடல்கள், உடல் உறுப்புகள் இழந்த நிலையில் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன. நீரில் நீண்ட நேரம் மூழ்கியிருந்ததாலும், இடிபாடுகளின் அதிக எடை காரணமாகவும் உடல்கள் இவ்வாறு சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அடையாளம் காணமுடியாத 1,030 உடல்கள் தற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், டிஎன்ஏ மாதிரிகள் சேகரிப்பு உள்ளிட்ட தேவையான அனைத்து நடைமுறைகளும் நிறைவு செய்யப்பட்ட பின்னரே உடல்கள் அடக்கம் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Two rescued safely after 10 days in Nepal floods