திமுக, அதிமுக இணைந்து பாஜக கூட்டணியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது; அமைச்சர் நிர்மல்குமார்..!
Minister Nirmal Kumar says DMK and AIADMK may contest the elections in a BJP alliance
''திமுகவும், அதிமுகவும் ஒரே கூட்டணியில் இணைந்து பாஜகவுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது. திமுக, அதிமுக எங்கு சேர்ந்தாலும் தவெகவை நெருங்க முடியாது.'' என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் வ.உ.சி 155-வது பிறந்தநாளை முன்னிட்டு சிம்மக்கல் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் நிர்மல் குமார் இன்று (செப்.5) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது;
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்றும், லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கைகளில் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது என்றும், புகார்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், திமுக, அதிமுக தற்போது இணைந்து செயல்படுகிறதாகவும், விரைவில் திமுக, அதிமுக இணைந்து பாஜக கூட்டணியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டதோடு, திமுக, அதிமுக எங்கு சேர்ந்தாலும் தவெகவை நெருங்க முடியாது என்றும், பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து தற்போது பேச வேண்டியதில்லை. அதற்கு காலம் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தூய்மைப் பணியாளர்கள் மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் ஒப்பந்த தொழிலாளர்கள் குறித்து துறைவாரியாக முடிவெடுக்கப்படும் என்று கூறியதோடு, ஏழைகளுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தவெக அரசு செய்து கொடுக்கும் என்றும் உறுதியளித்துள்ளார். அதேப்போன்று, தமிழகத்தில் ஏழை மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு உள்ளது. ஊழல்வாதிகளுக்கு தான் பாதுகாப்பு இல்லை. அவர்கள் மேல் தான் வழக்குகள் உள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பேரவையில் முதல்வர் பதிலுரை நாளில் பதிலுரைக்கு பிறகு மானியக் கோரிக்கையும் உள்ளதால், மீண்டும் கேள்வி நேரம் வைத்தால் பேரவைக் கூட்டம் முடிய 09 மணியாகிவிடும் என்றும், இதனால் கேள்வி நேரம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணம் அடுத்த வாரம் இருக்கும். இப்பயணம் குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
மீனாட்சியம்மன் கோயில் விஷயத்தில் தலையிடுவதில்லை. பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பாக ஆலோசனைகள் மட்டுமே மேற்கொண்டு வருகிறோம் என்று குறிப்பிட்ட அமைச்சர், முந்தைய அரசு கோயில் விவகாரத்தில் செய்த தவறுகள் இந்த ஆட்சியில் நடைபெறாது என்றும், கோயில் அறங்காவலர்கள் குழுவில் திமுக குடும்பத்தினர் நியமிக்கப்பட்டது போன்ற தவறுகள் நடக்காது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிடிஆர் குடும்பத்துக்கு சொந்தமான திருமண மண்டப நிர்வாகிகள் சிலர் எங்களை சந்தித்து, 03 ஆண்டுகளாக தங்களை செயல்பட விடுவதில்லை என்றும், அறக்கட்டளையை முடக்கி வைத்திருப்பதாக தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவரது ஈகோவால் சொந்த குடும்பத்தின் அறக்கட்டளையை முடக்கி வைத்துள்ளார் என்று குறிப்பிட்டதோடு, தவெக கூட்டணியின் பெயரை முதல்வரும், கூட்டணி கட்சித் தலைவர்களும் முடிவு செய்வார்கள் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
English Summary
Minister Nirmal Kumar says DMK and AIADMK may contest the elections in a BJP alliance