'ப்ளூ கார்னர் நோட்டீஸ்' வழங்கி தேடப்படும் குற்றவாளியான சுவாமி நித்தியானந்தா புதுச்சேரி வருகிறாரா..? முதல்வரிடம் பாதுகாப்பு கோரியுள்ள கைலாசா சீடர்கள்..!
Kailash followers have requested CM Rangasamy for security for Swami Nithyanandas visit to Puducherry
சர்வதேச இன்டர்போல் போலீசால் தேடப்படும் குற்றவாளியாக ஆன்மீகவாதி நித்யானந்தா புதுச்சேரி வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் புதுச்சேரி வருவதற்காக பாதுகாப்பு கேட்டு அவரது சீடர்கள் யூனிய பிரதேச முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, புதுச்சேரி அடுத்த ஏம்பலம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கைலாசா நித்யானந்தா தியான பீடத்துக்கு, குடமுழுக்கு செய்வதற்கான நடவடிக்கைகளை நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி சட்டசபைக்கு வந்த நித்யானந்தரின் சீடர்கள், முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்து, ஏம்பலத்தில் அமைந்திருக்கும் நித்தியானந்தா தியான பீடத்துக்கு விரைவில் குடமுழுக்கு செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும், இதில் பங்கேற்க நித்யானந்தா புதுச்சேரிக்கு வருகை தர உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சுவாமி நித்தியானந்தா புதுச்சேரி வருவது தொடர்பாக மத்திய அரசிடமும் பேசி வருகிறதாகவும், அதன்படி, அவர் புதுச்சேரிக்கு வரும்போது மாநில அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கு முதல்வர் ரங்கசாமி, 'சரி, அவர் வரட்டும்.. பார்த்துக் கொள்ளலாம்' என்று கூறியுள்ளார். அப்போது ரங்கசாமிக்கு, கைலாசா சிறப்புகள் அடங்கிய புத்தகத்தை தியான பீட நிர்வாகிகள் வழங்கியுள்ளனர்.

பாலியல், ஆள்கடத்தல், சிறார்களை தவறாக வழி நடத்துதல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய நித்யானந்தா தலைமறைவாகியுள்ளார். கடந்த 2020-இல் கைலாசா என்ற பெயரில் தனி நாட்டை உருவாக்கியதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.
அதிலிருந்து தினமும் தனது சமூக வலைத்தளத்தில் தொடர்ச்சியாக வீடியோக்களில் மட்டும் நித்யானந்தா பேசி வருகிறார். நித்யானந்தாவுக்கு இன்டர்போல் கடந்த 2020-ஆம் ஆண்டு ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சூழலில் நித்யானந்தா புதுச்சேரிக்கு வருவதாக அவரின் சீடர்கள் தெரிவித்திருப்பது பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Kailash followers have requested CM Rangasamy for security for Swami Nithyanandas visit to Puducherry