திமுகவில் கட்டமைப்பு மாற்றம்? 115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு!
Structural overhaul in the DMK Number of District Secretaries to rise to 115 Stalin sets a deadline to infuse young blood into the party
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் விரிவான அமைப்பு ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கட்சியின் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை தற்போதைய 72-இலிருந்து 115 ஆக உயர்த்தும் திட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய அமைக்கப்பட்ட கள ஆய்வுக்குழுவின் அறிக்கையில், கட்சிக்குள் புதிய தலைமுறைக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும், காலத்திற்கு ஏற்ப இளைஞர்களுக்கு முக்கிய பொறுப்புகள் அளிக்கப்பட வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுகவில் நீண்டகாலமாக மூத்த நிர்வாகிகள் மற்றும் அரசியல் வாரிசுகள் முக்கிய பொறுப்புகளை வகித்து வருவது, புதிய தலைமுறை அரசியல் ஆர்வலர்களிடையே அதிருப்தியை உருவாக்கியதாகவும், அதன் காரணமாக இளைஞர்கள் மாற்று அரசியல் கட்சிகளை நோக்கி நகரும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வுக்குழு சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இளைஞர்களுக்கு அதிக இடம் வழங்கும் வகையில் சுமார் 60 சதவீத பொறுப்புகளை புதிய தலைமுறையினருக்கு வழங்க திமுக தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தற்போதைய சில மாவட்டச் செயலாளர்களின் பொறுப்புகளில் மாற்றம் செய்யப்படலாம் என்றும், சிலரின் பதவிகள் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
சென்னை மாவட்டத்தில் குறிப்பாக பெரிய அளவிலான மாற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தலித் மற்றும் மீனவர் சமூகங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. இதன் மூலம் கட்சியின் சமூக பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்த திமுக தலைமை முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கட்சியின் அமைப்பு வலிமையை மீண்டும் கட்டியெழுப்பவும், புதிய தலைமுறையினரை முன்னிறுத்தவும், அடிமட்ட கட்டமைப்பை வலுப்படுத்தவும் திமுக தலைமை விரிவான மாற்றங்களுக்கு தயாராகி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை 115 ஆக உயர்த்துவது, பதவி மாற்றங்கள் அல்லது புதிய நியமனங்கள் தொடர்பாக திமுக தலைமையிடமிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, இத்தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களின் அடிப்படையிலேயே பார்க்கப்படுகின்றன.
English Summary
Structural overhaul in the DMK Number of District Secretaries to rise to 115 Stalin sets a deadline to infuse young blood into the party