அமைச்சர் ஜெயகுமார் அளித்துள்ள ’ரகசிய கடிதம்'! ஸ்டாலின் உண்டாக்கிய பரபரப்பு!  - Seithipunal
Seithipunal


மத்திய அமைச்சர்களை டெல்லியில் சந்தித்து அமைச்சர் ஜெயகுமார் அளித்துள்ள ’ரகசிய கடிதம்’ காவிரி டெல்டா தொடர்பானதா அல்லது அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள் தொடர்பானதா?” திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

நேற்று (12.02.2020) திருமண விழா ஒன்றில் ஸ்டாலின் பேசியதாவது, "மதுரவாயல் தெற்குப் பகுதி கழகச் செயலாளர் காரம்பாக்கம் கணபதி அவர்கள் இல்லத்தில் அவருடைய அன்பு மகள் லாவண்யா அவர்களுக்கும், மணி - புஷ்பலதா தம்பதியின் அருமை மகன் மதன் அவர்களுக்கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு மணவிழா நிகழ்ச்சி நிறைவேறி இருக்கிறது. இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பேற்று, மணவிழாவை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தக்கூடிய சிறப்பான வாய்ப்பினைப் பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். பெருமைப் படுகிறேன்.

மாவட்டச் செயலாளர் வரவேற்புரை ஆற்றும் போது, இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு நான் வந்திருப்பதில் அவரும், கணபதி அவர்களும், அவரது குடும்பத்தாரும், மாவட்டக் கழகமும் பெருமைப்படுவதாகச் சொன்னார். நீங்கள் மட்டும் அல்ல நானும் பெருமைப்படுகிறேன். அந்த உணர்வோடுதான் இந்த மணவிழா நிகழ்ச்சியில் உங்களுடன் சேர்ந்து மணமக்களை வாழ்த்த வந்திருக்கிறேன்.

பொருளாளர் அவர்கள் வாழ்த்துரை வழங்கும்போது இது சுயமரியாதை உணர்வோடு நடைபெறுகிற திருமணம் என்று பெருமையோடு குறிப்பிட்டுச் சொன்னார். நான் ஒரே வரியில் சொல்ல விரும்புவது, இது சீர்திருத்த திருமணம் மட்டும் அல்ல, சுயமரியாதை உணர்வோடு நடைபெறுகிற திருமணம் மட்டும் அல்ல, தன்மானத்தோடு, தலைநிமிர்ந்து நடைபெறும் திருமணம் மட்டும் அல்ல - தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும் - அப்படிப்பட்ட பெருமைக்குரிய தமிழ் மொழியிலேயே இந்தத் திருமணம் நடந்தேறி இருக்கிறது. ஆக இதுபோன்ற சுயமரியாதைத் திருமணம் நடைபெறும் நேரத்தில் ஒன்றை நீங்கள் மறந்துவிடக்கூடாது. 1967க்கு முன்னர் நடைபெற்ற இதுபோன்ற திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் அங்கீகாரத்தை பெறமுடியாத நிலை இருந்தது. ஆனால், 1967ல் தமிழ்நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்த போது, இருமொழிக் கொள்கை, சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடி ஆகும், மெட்ராஸ் என்றும் சென்னை மகாணம் என்றும் அழைக்கப்பட்டு வந்த தமிழகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கூடிய தீர்மானம் என 3 தீர்மானங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றித் தந்தார்கள். எதற்காக தற்போது நினைவு கூர்கிறேன் என்றால் தற்போது நடைபெற்றுள்ள சீர்திருத்த திருமணம் சட்டப்படி, முறைப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தோடு நடைபெற்றுள்ளது. அப்படிப்பட்ட இந்த திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவதில் உங்களோடு சேர்ந்து நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

கணபதி அவர்களைப் பற்றி உங்களிடம் அதிகம் எடுத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். கொல்லன் தெருவில் ஊசி விற்ற கதை. அதுபோல் அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் நீங்கள். இயக்கப்பணி ஆற்றுவதாக இருந்தாலும் சரி, மக்களோடு சேர்ந்து பொதுப்பணி ஆற்றுவதாக இருந்தாலும் சரி, இரண்டையும் ஒன்றாகக் கருதி போட்டி போட்டு பணியாற்றி, பொதுமக்களிடத்திலும், கழகத்திலும் நல்ல பெயரை வாங்கக் கூடிய ஆற்றல் வாய்ந்தவர்.

இன்று காலை பத்திரிகையில் ஒரு வேடிக்கையான செய்தி பார்த்தேன். அதைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா என தெரியவில்லை. அது என்னவென்றால் என்னைப்போல் எல்லோரும் பணியாற்றினால் போதும் என அவரது கட்சித் தோழர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை சொல்லி இருக்கிறார். நாட்டில் நடக்கும் ஊழல்கள் அனைத்திற்கும் காரணமான அவரைப் போல பணியாற்ற வேண்டுமா? நாட்டில் எங்கு பார்த்தாலும் நடக்கும் அக்கிரமங்களுக்கு அடிகோலும் அவரைப் போலவா? தன்னை விவசாயி எனக் கூறிக் கொண்டு சென்னை - சேலம் 8 வழிச் சாலை போடுவதாக சொல்லி அங்குள்ள மக்களை, விவசாயிகளைத் துன்புறுத்துகிறாரே! அதனால்தான் அவரைப்போல் நடக்க வேண்டும் எனக் கூறுகிறாரா? அதுமாதிரி நடந்தால் இந்த நாடு குட்டிச் சுவராகப் போய்விடும். அதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை.

2 நாட்களுக்கு முன்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்திருக்கிறார். இது யாரை ஏமாற்றுவதற்கு? டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதற்காக விவசாயிகளும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். திமுக மட்டுமின்றி அனைத்துக் கட்சிகளும் அதற்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. அதை யாரும் மறுக்கவில்லை. வரவேற்கிறோம். அதை வேளாண் மண்டலமாக ஆக்கினால் விவசாயப் பெருங்குடி மக்கள் பலன் அடைவார்கள். இன்று பல கொடுமையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதை முதலமைச்சர் அறிவிக்கும்போது என்ன நிலை? இதை யார் அறிவிக்க வேண்டும்? மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும். இந்த சராசரி அறிவுகூட முதலமைச்சருக்கு இல்லை என்பதுதான் நமக்கு இருக்கும் கவலை. இங்கிருப்பவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பாராட்டு விழா நடத்த தொடங்கி உள்ளனர். இது அரசிதழில் முறையாக பதிவாக வேண்டும். மத்திய அரசின் அனுமதியைப் பெறவேண்டும். மத்திய அரசுதான் இதற்கு நிதியைத் தருகிறது. ஏற்கனவே 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக கிணறுகள் தோண்டி அதற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதை மூடிவிட்டீர்களா? அதை மூடிய பிறகுதான், எந்த அனுமதியும் கிடையாது என உத்தரவு பிறப்பித்த பின்னர்தான் முதலமைச்சரின் அறிவிப்பை நிறைவேற்ற முடியும். அதை மத்திய அரசுதான் நிறைவேற்ற வேண்டும். அதை முதலமைச்சரால் சொல்ல முடியவில்லை.

நேற்றுக்கூட நமது திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு இதுகுறித்து கேள்வி எழுப்பினார். மாநில முதலமைச்சர் அறிவித்துள்ள இந்த அறிவிப்புக்கு மத்திய அரசு என்ன சொல்கிறது என்று விளக்கம் கேட்டார். மாநிலங்களவையிலும் திருச்சி சிவா அவர்கள் இந்தப் பிரச்சனை குறித்து கேட்டுள்ளார். அதற்கு எந்தப் பதிலையும் மத்திய அரசு வழங்கவில்லை. மத்திய அரசு இதற்கு என்ன சொல்கிறது என்ற விளக்கமும் இல்லை.

இதனிடையே, முந்திரிக்கொட்டை அமைச்சர் ஜெயக்குமாரை டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். டெல்லியில் அமைச்சர்களைச் சந்தித்து ஒரு கடிதம் கொடுத்துள்ளார். அது ரகசிய கடிதம் என்கிறார்கள். என்ன கடிதம் அது. இது சம்பந்தமான கடிதமா? அல்லது ஏற்கனவே வழக்கில் சிக்கித் தவிக்கிறீர்களே அது சம்பந்தமான கடிதமா? எனத் தெரியவில்லை. அதையாவது வெளியிட வேண்டும்.

நாளை மறுநாள் சட்டமன்றம் கூடப்போகிறது. பட்ஜெட் கூட்டத் தொடர். அந்தக் கூட்டத்தில் நாங்கள் சும்மா விடப் போவதில்லை. இந்தப் பிச்சனையை எழுப்பத்தான் போகிறோம். அதற்கு விளக்கத்தை அவர்கள் சொல்லித்தான் ஆகவேண்டும். டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் எனத் தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டிருக்கிறோம். ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்ற காரணத்தினாலும், நாடாளுமன்றத்தில் ஒரு பெரிய தோல்வியைச் சந்தித்த காரணத்தினாலும், தேர்தலை எதிர்நோக்கி இருப்பதாலும் அங்கிருக்கும் விவசாயப் பெருங்குடி மக்களை ஏமாற்றுவதற்காக திட்டமிட்டு ஒரு நாடகத்தை இன்றைக்கு அவர்கள் அரங்கேற்றி இருக்கிறார்கள். உள்ளபடியே கொண்டுவந்தால் அதை வரவேற்க காத்திருக்கிறோம்.

நீட்தேர்விற்கும் அப்படித்தான் சொன்னார்கள். நீட் வராது என அதிமுகவின் பொதுக்குழுவிலேயே தீர்மானம் இயற்றினார்கள். அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். சட்டமன்றத்தில் 2 முறை தீர்மானம் போட்டு அனுப்பி வைத்திருக்கிறோம். தொடர்ந்து அவர்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் என்ன ஆனது? நீட் தேர்வு வந்துவிட்டது. எனவே மத்திய அரசு அதை சொல்ல வேண்டும். மத்திய அரசிடம் சென்று முறையிடுவதற்கு, வலியுறுத்துவதற்கு இவர்கள் தயாராக இல்லை. எனவே, சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதை நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசு. அதை மத்திய அரசிடம் வலியுறுத்திச் சொல்வதற்கு இங்கிருக்கும் முதலமைச்சருக்கோ, இந்த ஆட்சிக்கோ அருகதை கிடையாது.

ஏன் என்றால், மத்திய பாஜக அரசிடம் மண்டியிடும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அடிமை ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆகவே இந்த, ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை விரைவில் வர இருக்கிறது. அப்படி வரும் நேரத்தில் நீங்கள் அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சிறப்பான வகையில் ஆதரவைத் தரவேண்டும். அந்த ஆதரவைப் பெருக்கும் வகையில் இந்த வட்டாரத்தில், பகுதியில், தொகுதியில் நம்முடைய அருமை சகோதரர் கணபதி அவர்கள் மிகச் சிறப்பாக அந்தப் பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறார். அவரது பணி தொடரவேண்டும். அவரது இல்லத்து செல்வங்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெற்று சிறப்பாக வாழவேண்டும். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னதைப் போல, வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய் வாழ வேண்டும் என மணமக்களை வாழ்த்தி விடை பெறுகிறேன்" என ஸ்டாலின் பேசினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin questioned minister jayakumar handover letter to central ministers in Delhi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->