ஈவு இரக்கமற்ற விளையாட்டை நிறுத்தி, உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


"வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கவும் - ஐடி நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் நீக்கப்படுவதைத் தடுக்கவும், மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அவர் வெளியிட்ட அறிக்கையில், "கோவை மாநகராட்சியில் 549 துப்புரவுப் பணியாளர்கள் வேலைக்குப் பொறியாளர்களும், பட்டதாரிகளும் விண்ணப்பித்தார்கள்” என்ற செய்தி ; ஊழலையே முழுநேர வேலையாகக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியில், தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவிற்கு கோர ரூபம் எடுத்துத் தாண்டவமாடுகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

புதிய தொழில்கள், வேலை வாய்ப்புகள் எதையுமே உருவாக்காமல் - உருவாக்குவது குறித்துச் சிந்தித்துக் கூடப் பார்க்காமல், அதைப் பற்றிய எவ்விதக் கவலையும் கொள்ளாமல், இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்தி வரும் அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்டுள்ள இந்த அவல நிலை, தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய சாபக்கேடாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் எல்லாம், ஏற்கனவே ஏதாவது ஒரு 'செயற்கைக் காரணத்தைச்' சுட்டிக்காட்டி, ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பி வருகின்றன.

இந்நிலையில், அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும், பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐ.டி. ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

மத்திய - மாநில அரசுகள் ஐ.டி. ஊழியர்களின் பணிக்கு ஏற்பட்டுள்ள அபாயம் குறித்து - அதைத் தடுப்பதற்கு அக்கறை காட்டவும் இல்லை, கவலைப்படவும் இல்லை என்பது கடும் கண்டனத்திற்குரியது.

இது போன்ற வேலையில்லாத் திண்டாட்டத்தின் உச்சக்கட்டம்தான்; பொறியாளர்களும், பட்டதாரிகளும் துப்புரவுப் பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கும் மிகப் பரிதாபமான கட்டாயத்தை உருவாக்கியிருக்கிறது.

நாட்டின் எதிர்காலம் என்று கருதப்படும் இளைஞர்களின் வாழ்வுடன் மத்திய - மாநில அரசுகள் இது மாதிரியொரு ஈவு இரக்கமற்ற விளையாட்டை நடத்திக் கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது.

ஆகவே, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கவும், ஐ.டி. நிறுவனங்களில் இருந்து கொத்துக் கொத்தாக ஊழியர்கள் நீக்கப்படுவதை உடனடியாகத் தடுக்கவும் மத்திய பா.ஜ.க. அரசும், இங்குள்ள அ.தி.மு.க. அரசும் உரிய உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin about unemployment in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->