'கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்துக்குள் நடைபெற்ற படுகொலை; சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'; சீமான் ஆவேசம்..!
Seeman criticized the murder that took place inside the Kilpauk hospital complex as the height of law and order breakdown
''சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்துக்குள் நடைபெற்ற பச்சைப் படுகொலை சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்” இந்த கொடூரக் கொலைகள் நடைபெறும் ஆட்சிதான் எந்த கொம்பனாலும் குறைசொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சியா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
'சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பிரசவ பிரிவு அருகே தன் மனைவியைக் காணச் சென்ற கொளத்தூரைச் சேர்ந்த ஆதிகேசவன் என்பவரை 3 பேர் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு பாதுகாப்பாகத் தப்பிச் சென்ற செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் மிக முக்கிய இடங்களில் ஒன்றான கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றுள்ள இப்படுகொலை தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது என்பதற்கு தக்கச்சான்றாகும்.
தமிழ்நாட்டில் கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், அரசு மருத்துவர், அரசுப்பள்ளி ஆசிரியர், வழக்கறிஞர்கள், பள்ளி - கல்லூரிப் பெண்கள், சாமானிய மக்கள், சமூக விரோத குழு மோதல்கள் என்று பட்டப்பகலில் அடுத்தடுத்து நிகழும் கொலைவெறித் தாக்குதல்கள் யாவும் திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சமூக விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற கேள்வியும் எழுகிறது.

தமிழ்நாட்டில் சாதியத் தீண்டாமை கொடுமைகள், ஆணவப் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், பட்டப்பகலில் நாள்தோறும் நிகழும் படுகொலைகள், பெருகி ஓடும் கள்ளச்சாராயம், கட்டுக்கடங்காத கஞ்சா புழக்கம் என திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்ப முடியாத கொடுஞ்சூழல் நிலவுகிறது. மக்கள் வாழவே தகுதியற்ற நிலமாக தமிழ்நாட்டினை மாற்றி நிறுத்தியுள்ளதுதான் திமுக அரசின் 5 ஆண்டு காலச்சாதனையாகும்.
முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ்நாட்டின் காவல்துறை முற்றிலும் செயலிழந்த துறையாகிவிட்டது. இந்த கொடூரக் கொலைகள் நடைபெறும் ஆட்சிதான் எந்த கொம்பனாலும் குறைசொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சியா? வெட்கக்கேடு.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்து நிகழும் கொடூரப் படுகொலைகள் யாவும் திமுகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றுவதே மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரே வழி என்பதையே மக்களுக்கு தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது!
ஆகவே, திமுக அரசு இனியும் அலட்சியமாக செயல்படாது, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்திற்குள் நடைபெற்ற கொடூரப் படுகொலையைப் புரிந்த குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்'என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Seeman criticized the murder that took place inside the Kilpauk hospital complex as the height of law and order breakdown