எந்த நேரத்தில் என்ன நடக்கும்னே தெரியாது..! நெல்லையில் ஜாதி கொலை, திருப்புவனத்தில் சட்ட கொலை: சட்டம் ஒழுங்கு, கட்டுப்பாடு எங்கு இருக்கிறது..? சீமான் காட்டம்..!
Seeman asks where is the law and order and control in Tamil Nadu
எல்லா உயிர்களையும் நேசித்த இனத்தில், சக மனிதனை வெட்டுவது குத்துவது நடக்கிறது. சட்டம் ஒழுங்கில் தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு நாடாக மாறி கொண்டு உள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நெல்லையில் நிருபர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது;
பள்ளி மாணவர்கள், அரிவாளோடு ஜாதிய வன்மத்துடன் வெட்டுகிறார்கள். அவன் மனதில் ஜாதி வன்மம் எப்படி ஊண்டப்பட்டது. இங்கு அமைப்பே தப்பாக இருக்கிறது. அது தான் இங்கு பிரச்சினை என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஜாதி சார்ந்து குளம், ஜாதி சார்ந்து கிணறு, ஜாதி சார்ந்து சுடுகாடு, பிணத்தை எதற்கு தனித்தனியாக புதைக்கும் இடம் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மழை ஜாதி பார்த்து பெய்யவில்லை. நிலம் யாரும் பாகுபாடு பார்க்கவில்லை. செத்தாலும் தமிழனுக்கு ஜாதி போகாது என்றால் இந்த சமூகத்தை ஒன்றும் செய்யக்கூடாது. ரொம்ப கடினம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் நெல்லையில் தான் ஜாதி மோதல்கள் அதிகம் நடக்கிறது என்றும், உயிரை மாய்க்கும் பகை வருவது ஏன்? ஜாதி ரீதியில் நடக்கும் கொலையை தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்றாது என்று கூறியுள்ளார். நெல்லையில் ஜாதி கொலை செய்தது.. திருப்புவனத்தில் சட்டம் கொலை செய்தது. என்று கூறியுள்ளார். அத்துடன், அஜித்குமாரை கொலை செய்தது சட்டம் என்றும், அங்கு ஏன் இவ்வளவு பேர் வரவில்லை என்றும், ஏன் இவ்வளவு போராடவில்லை எனவும், இங்கு இரண்டு ஜாதி ஓட்டு வேண்டும் என்பதால், அரசு துடிக்கிறது. அதற்காக வேலை செய்கிறது என்றும் கடுமையாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இதில் ஓட்டு பார்க்கக்கூடாது. எல்லாவற்றையும் ஓட்டாக பார்த்தால் நாட்டை பற்றி கவலைப்பட மாட்டீர்கள் என்று பேசியுள்ளார். ஒரு கொலை நடந்தால், கொலையாளியின் சான்றிதழ், கல்வி சான்றிதழ் செல்லாது . ரேஷன் கார்டு கிடையாது. ஓட்டுரிமை கிடையாது. தலைமுறைக்கே அரசு வேலை கிடையாது என செய்தால், கொலை செய்வானா..? என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஜாதி பெருமையுடன் வாழ்ந்து கொள் என்றால் கொலை நடக்குமா..? ஆயிரம் கனவுகளோடு படித்து சாதனை படைக்க வேண்டும் என்று இருந்த குழந்தையை ஜாதி கொலை செய்யும் என்றால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.

சட்டம் ஒழுங்கில் தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு நாடாக மாறி கொண்டு உள்ளது. இது நாடா... சுடுகாடா... என தெரியவில்லை என்று மேலும் பேசியுள்ளார். அத்துடன், சட்டம் ஒழுங்கு, கட்டுப்பாடு எங்கு இருக்கிறது என்றும், இதெல்லாம் பாவச்செயல் என கல்வி இருந்தது. இப்போது எங்கு இருக்கிறது என்று மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், கொலை செய். ஜாதிய எண்ணம், சிந்தனையை கொலை செய். ஜாதிக்காக சக மனிதனை சாகடிக்க்கூடாது. அப்படி கொலை செய்துவிட்டு என்ன செய்ய போகிறார் என்று கேட்டுள்ளார். தமிழர்களுக்கு மொழிப்பற்று இனப்பற்று ஊட்டப்படாமல் திட்டமிட்டு மதம் மற்றும் ஜாதிப்பற்று ஊட்டப்படுகிறது. எது செத்தாலும், சரி ஜாதி, மதம் செத்துவிடக்கூடாது என்கிற எண்ண ஓட்டம் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எது செத்தாலும் ஜாதி செத்துவிடக்கூடாது என்பது எவ்வளவு பெரிய கொடூரமான, ஆபத்தான சமூகத்தை உருவாக்கிவிடும் என யோசிக்கவேண்டும். ஜாதிக்கு ஜாதி கட்சி தோன்றுவிட்டது. சாதித்தது என்ன?என்று சீமான் நிருபர்களிடம் கூறியுள்ளார்.
English Summary
Seeman asks where is the law and order and control in Tamil Nadu