மண்கோட்டைக் கனவு… நிஜ அலை வந்தால் நொறுங்கும்! தவெக குறித்து கடுமையாக விமர்சித்த வைகோ...!
sandcastle dream it crumble when real wave comes Vaiko severely criticized DMK
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பல்வேறு அரசியல் நிலைப்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்தார்.“தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட நாளிலிருந்து கடந்த 31 ஆண்டுகளாக ம.தி.மு.க.வை உறுதியுடன் நடத்தி வருகிறேன். முல்லைப்பெரியாறு, ஸ்டெர்லைட் போன்ற மக்களின் வாழ்வாதாரத்தைத் தொட்ட பிரச்சனைகளில் எப்போதும் நான் முன்களத்தில் நின்றேன்” என வைகோ கூறினார்.

நீதிமன்ற தீர்ப்புகளுக்கான தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய அவர், “நீதிபதிகளை நான் மதிக்கிறேன். ஆனால் அவர்கள் தங்களது வரம்பிற்குள் பேச வேண்டும். திருப்பரங்குன்றம் தொடர்பான மதுரை ஐகோர்ட் உத்தரவு ஜனநாயக மரபுகளுக்கு முரணானது,” என்று கண்டனம் தெரிவித்தார்.
அதே நேரத்தில், விஜயின் புதிய கட்சியை பற்றி பேசும் போது, “பொது பிரச்சனைகளில் ஈடுபட்டதா? மக்கள் போராட்டங்களில் கலந்து கொண்டதா? சமூக பிரச்சனைகளில் எந்தக் குரலும் எழுப்பாத நிலையில் கட்சி தொடங்கியிருக்கிறார். ஆனால் தனிப்பட்ட முறையில் விஜயை நான் மதிக்கிறேன்” என குறிப்பிட்டார்.
மத்திய ஆட்சியை விமர்சித்த வைகோ, “எந்த கூட்டணியுடன் சேர்ந்தாலும் தி.மு.க.வை தோற்கச் செய்வது சாத்தியமில்லை. தமிழ் நாட்டில் இந்துத்துவ சக்திகள் ஊடுருவ முயற்சி செய்து வருகின்றன; ஆனால் இந்த நிலப்பரப்பில் அவர்கள் முன்னேற முடியாது. தி.மு.க. கூட்டணியைக் குலைக்க பல முயற்சிகள் நடந்தாலும் ஒன்றும் பலிக்காது” என்றார்.
அமித்ஷாவின் பேச்சை குறிவைத்து, “கர்வத்திலும் அகந்தையிலும் தி.மு.க.வை துடைத்தெறிவோம் என்று பேசுகிறார். 100 மடங்கு பலம் கொண்டவர்களால் கூட இது சாத்தியப்படாத நிலையில், அமித்ஷா நாவை அடக்கி பேச வேண்டும். அரசியல் கட்சிகளை விமர்சிக்கும் போது பொறுப்புடன் பேச வேண்டும்” என வைகோ எச்சரித்தார்.
பாஜக அரசின் திட்டப் பெயர்களை சுட்டிக்காட்டிய அவர், “சமஸ்கிருதப் பெயர்களை வைத்து இந்தியாவை மதச்சார்பற்ற கொள்கையிலிருந்து பிரிக்க முயல்கிறார்கள். நாட்டின் பெயர் 'பாரத்' என மாற்றுவதற்கும் நாட்டைத் துண்டிக்கப் பா.ஜ.க. நாடுகிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் மாற்றம் குறித்து, “எஸ்.ஐ.ஆர். மூலம் 75 லட்சம் உண்மையான வாக்குகளை நீக்கும் திட்டம், அதே முறையில் 65 லட்சம் வெளிமாநில வாக்குகளை சேர்க்கும் முயற்சி நடைபெற்று வருகிறது” என்றார்.விஜயின் அரசியல் இலக்கை விமர்சித்த வைகோ, “தமிழ்நாட்டின் முதல்வர் பதவிக்கு ஆசை எனக்கு இல்லை; நான் ஒருபோதும் அத்தகைய கனவு காணவில்லை.
ஆனால் ‘தி.மு.க.–த.வெ.க. மோதல்’ என சினிமா வசனம் போல விஜய் பேசுகிறார். அது கனவு மட்டுமே—காகிதக் கப்பலில் கடலைக் கடக்க முயல்வது போல. ஆகாயத்தில் மண்கோட்டை கட்டுவது போல. அது இறுதியில் மண்கோட்டையாகவே சிதறும்” என கடுமையாக விமர்சித்தார்.
English Summary
sandcastle dream it crumble when real wave comes Vaiko severely criticized DMK