மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் - புதிய தமிழகம் கிருஷ்ணசாமி!
PT Krishnasamy say MH CM should Apology
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை, நாடெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் செயல் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "இந்திய நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக மே மாதம் 14 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட மாண்புமிகு பி.ஆர்.கவாய் அவர்கள் முதன்முறையாக இன்றைய தினம் மும்பை சென்றுள்ளார். இவர் முன்னாள் கவர்னரும், குடியரசு கட்சியின் தலைவருமான ஆர்.எஸ். கவாய் அவர்களின் புதல்வரும் ஆவார். தலித் சமூகத்தில் பிறந்து, புத்த மதத்தைத் தழுவிய குடும்பப் பின்னணியை கொண்டவர்.
பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒரு மாநிலத்திற்கு செல்லும் பொழுது அதுவும் குறிப்பாக தனது பிறந்த மாநிலத்திற்கு செல்லும் பொழுது அம்மாநில தலைமைச் செயலாளர், தலைமை காவல்துறைத் தலைவர் (டிஜிபி), மாநகர காவல் ஆணையாளர் மற்றும் தகுதி வாய்ந்த மாநில அமைச்சர் ஒருவரும் விமான நிலையம் சென்று வரவேற்று இருக்க வேண்டும். ஆனால் உயர் அதிகாரிகள் எவரும் வரவேற்கச் செல்லவில்லை. இன்று அவருக்கு உரியக் கௌரவம் அளிக்கப்படவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதி கவாய் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை நாடெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் செயலாகும். மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் அவர்கள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களை உடனடியாக சந்தித்து இச்சம்பவத்திற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
English Summary
PT Krishnasamy say MH CM should Apology