சாதி அடிப்படையில் நிர்வாகிகளை நியமிக்கும் திமுக, அதிமுக மாற வேண்டும் - புதிய தமிழகம் கிருஷ்ணசாமி!
PT Krishnasamy Condemn to ADMK DMK
திருச்சியில் கவின் ஆணவக் கொலைக்கு எதிராக புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்கட்சித் தலைவரான கே. கிருஷ்ணசாமி தலைமையிலும், சிவா கிருஷ்ணசாமி முன்னிலையிலும் நடைபெற்ற இந்த போராட்டத்தில், ஆணவப் படுகொலைகளைத் தடுக்க அரசே முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே. கிருஷ்ணசாமி, தமிழகத்தில் சாதி வெறி படுகொலைகள் அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும், அவற்றை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, விரைவு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாதி வெறி எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.
தான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காலத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட ஆணவப் படுகொலைகள் நடந்ததாகவும், அப்போது எடுத்துக்கொள்ளப்படாத நடவடிக்கைகள் இன்றும் தொடர்ச்சியான பிரச்னையாகி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கவின் வழக்கை குறித்து பேசும் போது, சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும், அதனை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழகத்தில் பிற மாநிலங்களை விட ஆணவக் கொலைகள் அதிகம் நடைபெறுவதற்கு ஆட்சியாளர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சாதி அடிப்படையில் நிர்வாக பொறுப்புகளை வழங்கும் நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
தனது கருத்துக்கள் எந்த தேர்தல் கூட்டணியோ, அரசியல் பிரசாரத்தோடு சம்பந்தப்படவில்லை; சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து இப்போது பேச தேவையில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
English Summary
PT Krishnasamy Condemn to ADMK DMK