அதிமுகவில் மீண்டும் அதிகாரப் போர்! எடப்பாடி எதிர்பார்க்காத ரூட்டில் செக் வைக்கும் எஸ்பி வேலுமணி? அதிர்ச்சியில் இபிஎஸ்!
Power struggle in AIADMK again Will SP Velumani check Edappadi in an unexpected way EPS in shock
அதிமுகவில் மீண்டும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் தலைமையிலான அணிக்கும் இடையே கட்சியின் கட்டுப்பாட்டுக்கான அதிகாரப் போட்டி வெளிப்படையாக வெடித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதையடுத்து, கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்துள்ளது. இதன் பின்னணியில் அதிமுக தற்போது இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.
சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அணியினர் தவெக அரசுக்கு எதிராக வாக்களித்த நிலையில், எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் அணியை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதையடுத்து, கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவை மீறி செயல்பட்டதாக கூறி, வேலுமணி தரப்பை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி தரப்பு சபாநாயகர் மற்றும் ஆளுநரிடம் மனு அளித்துள்ளது.
அதேநேரத்தில், “உண்மையான கொறடா சி. விஜயபாஸ்கர்தான்” என்று வாதிடும் வேலுமணி தரப்பினர், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 எம்.எல்.ஏக்களே கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என குற்றம்சாட்டி, அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளனர்.
இந்த இரு தரப்பு மனுக்களும் தற்போது சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரின் பரிசீலனையில் உள்ளன. “சட்டப்படி உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார். ஆனால், “கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நீக்கங்கள் செல்லாது” என்று வேலுமணி தரப்பு பதிலடி கொடுத்து வருகிறது.
மேலும், அதிமுக பொதுக்குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என்று வேலுமணி தரப்பு அழுத்தம் கொடுத்து வருகிறது. அதற்காக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் பணியிலும் அவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக கட்சிச்சட்டப்படி, பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு பேர் கோரிக்கை வைத்தால் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பதால், சுமார் ஆயிரம் உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் முயற்சியில் வேலுமணி அணி ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நகர்வை அறிந்த எடப்பாடி பழனிசாமி, தனது ஆதரவாளர்களிடம் “பொதுக்குழுவை கூட்டும் கோரிக்கைக்கு ஆதரவாக கையெழுத்திட வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அதிமுகவில் அதிகாரப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கட்சியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
English Summary
Power struggle in AIADMK again Will SP Velumani check Edappadi in an unexpected way EPS in shock