தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரம்; செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு போலீஸார் சம்மன் மற்றும் 'லுக்-அவுட்' நோட்டீஸ்..!
Police summons Senthil Balaji and Ashok Kumar and issue look out notices in connection with the deal made with the TVK MLA
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகிய இருவரும் திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். அத்துடன், அவர்கள் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க 'லுக்-அவுட்' நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகிய இருவரும் சிலர் மூலமாக தவெக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் அக்கட்சி எம்எம்ஏக்களிடம் சிலர் பேரத்தில் ஈடுபட முயன்ற விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜா புகாரின் அளித்துள்ள நிலையில், திருவல்லிக்கேணி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி, சென்னையைச் சேர்ந்த 'ஐடிபிஎஸ்' நிறுவனத்தின் நிறுவனர் தலைவர் திருநாவுக்கரசு, தியாகராஜன், செல்வன், சீனிவாசன், ராஜேஷ், திருச்சி நரேஷ், கரூரைச் சேர்ந்த கார்த்திக், ரமேஷ் ஆகிய 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசுவதற்காக ஒரு கார்ப்பரேட் கம்பெனி முதல்கட்டமாக ரூ.180 கோடி வரை ஒதுக்கியது என கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், எந்தெந்த எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுவது என முதலில் பட்டியல் தயாரித்துள்ளதாகவும், அதன்படி, சென்னையில் உள்ள ஒரு எம்எல்ஏ உட்பட பல எம்எல்ஏக்களிடமும் கைதானவர்கள் பேரம் பேசியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதாவது, சுமார் ஒரு வாரம் அந்த ஓட்டலில் திட்டம் போட்டு, எம்எல்ஏக்களை அழைத்துப் பேச முயற்சி செய்த நிலையில், இந்த விவகாரம் கசிந்ததால் அனைவரும் ஓட்டலை பாதியிலேயே காலி செய்துவிட்டு சென்றுள்ளதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனத்தை காவல் துறை கண்டறிந்துள்ளதாகவும், அதன் நிர்வாகிகளை அழைத்து விசாரணை நடத்தப்படவுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வழக்கில் இதுவரை 08 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், பேரம் விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் (ஜூலை -6) அன்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகிய இருவருக்கும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு திருவல்லிக்கேணி போலீஸார் சம்மன் அளித்துள்ளனர். கரூர் ராமேஸ்வரப்பட்டி கிராமத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டுக்கு சென்று அவரது தாயிடம் போலீஸார் சம்மனை அளித்துள்ளனர்.

இவர்களை போலீஸார் தேடி வரும் நிலையில், இருவரும் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அசோக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் திருவல்லிக்கேணி போலீஸார் 'லுக்-அவுட்' நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
முன்னதாக நெடுஞ்சாலைத் துறையில் ரூ.3.23 கோடி முறைகேடு தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கடந்த 03-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், அவர் ஆஜராகவில்லை.
மருத்துவ சிகிச்சைக்காக கடந்த ஜூன் 26-ஆம் தேதியே சிங்கப்பூர் சென்று விட்டதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதுபோல, செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி வெளிநாடு சென்றுவிடாமல் தடுக்க 'லுக்-அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Police summons Senthil Balaji and Ashok Kumar and issue look out notices in connection with the deal made with the TVK MLA