பின்வாங்காமல் திமுகவை இறங்கி அடிக்கும் பாமக! சென்டிமெண்டில் டச் செய்த பாமக வைத்தி! பழைய பன்னீர்செல்வமா எப்ப வருவீங்க! - Seithipunal
Seithipunal


அதெல்லாம் இருக்கட்டும் எம்.ஆர்.கே...  அய்யாவின் கேள்விகளுக்கு பதில் எங்கே? என பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் க.வைத்தி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வைப்புத்தொகையை இழந்து விடும் என்ற அச்சத்தில் வன்னியர் சமுதாய மக்களை ஏமாற்றும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஸ்டாலினின் மோசடி முகத்தையும், ஏமாற்று வித்தைகளையும் மருத்துவர் அய்யா அவர்கள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தலைமை கோலை எடுத்து ஆட்ட, முட்டத்து முன்னாள் அமைச்சர் அண்ணன் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் துள்ளிக் குதித்து ஆடித் தீர்த்திருக்கிறார்.

மருத்துவர் அய்யா அவர்களுக்கு எதிராக அறிக்கை விடும் அளவுக்கு தூக்கிப் பிடிக்கப்படும் அண்ணன் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அய்யா அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு உறுதியாக பதிலளிக்க முடியவில்லை என்றாலும், ஓரளவுக்காவது பதில் அளித்திருந்தால் கூட, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று மகிழ்ந்திருப்போம். ஆனால், பன்னீர்செல்வமோ சந்தையின் முகப்பில் சண்டையிடுவோரைப் போல சகதி வார்த்தைகளை அள்ளித் தெளித்திருக்கிறார். ஒருவேளை இது தான் அவரது முன்னாள் தலைவர் கற்றுத்தந்த கலாச்சாரமோ, இன்னாள் தலைவர் கற்றுத் தந்த நாகரீகமோ தெரியவில்லை.

எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் போன்று எழுத்துக்களையும், வார்த்தைகளையும் வீணாக செலவழிக்க  விரும்பவில்லை. நான் நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறேன். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மருத்துவர் அய்யா முன்வைத்த வினாக்கள் இவை தான்.....

1. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறும் திமுக, 1989&ஆம் ஆண்டுக்குப் பிறகு 12 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்ததே, அப்போது ஏன் அதை தரவில்லை?

2. ஏ.ஜி. என்று அழைக்கப்படும் ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு ஆட்சிக்கு வந்தால் மணிமண்டபம்  கட்டப்போவதாக கூறும் ஸ்டாலின், அவரது நூற்றாண்டு விழாவை ஏன் கொண்டாடவில்லை?

3. 1969&ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரைப்படி வன்னியர்களுக்கு மட்டும் 17% இட ஒதுக்கீடு வழங்க கலைஞர் மறுத்து விட்டார். 1988&ஆம் ஆண்டு ஆளுனர் ஆட்சியில் சாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையிடப்பட்ட நிலையில், வன்னியர் மக்கள் தொகைக்கு இணையாக 20%&க்கும் கூடுதலாக தனி இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், அவ்வாறு செய்யாமல் 20% ஒதுக்கீடு வழங்கி, அதை தமது சமுதாயம் உள்ளிட்ட 108 சமுதாயத்தினருடன் பிரித்துக் கொள்ளுங்கள் என்று கலைஞர் கூறினால், அது சாதகமா... துரோகமா?

வைத்தி பாமக, vaithi pmk, seithipunal

4. 69% இடஒதுக்கீட்டு வழக்கில் 23.07.2010 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானித்துக் கொள்ளலாம் என்று கூறியது. அதனடிப்படையில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று மருத்துவர் அய்யா கோரிய போது, வன்னியர்களுக்கு தன்னிச்சையாக இட ஒதுக்கீடு தர முடியாது; சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்கலாம் என்று 30.07.2010 அன்று கலைஞர் கூறினார்.  அதை ஏற்றுக்கொண்ட மருத்துவர் அய்யா அவர்கள், தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துங்கள் என்று 28.10.2010 அன்று கலைஞரை கோட்டையில் சந்தித்து வலியுறுத்தினார். அதை செய்வதாக உறுதியளித்த கலைஞர், அதன்பின் 8 மாதங்கள் பதவியில் இருந்த போதிலும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாதது வன்னியர்களுக்கு செய்த துரோகமா, இல்லையா?

5. வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரிகள், நீதிபதிகள், பேராசிரியர்கள் ஆகியோருக்கு திமுக தானாக முன்வந்தா பதவிகளை வழங்கியது? மருத்துவர் அய்யா அவர்கள் நெருக்கடி கொடுத்ததால் தானே பதவி வழங்கியது? இது குறித்த அய்யாவின் வினாக்கள் சரியானவை தானே?

6. வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் 29 திமுக அமைப்பு மாவட்டங்களில் 18 மாவட்டங்களில் வன்னியர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி மறுக்கப்பட்டிருப்பது உண்மை தானே?
7. மத்திய அமைச்சரவையில் திமுக பெற்ற 11 கேபினட் அமைச்சர் பதவிகளில் 6 கேபினட் அமைச்சர் பதவிகள் ஸ்டாலினின் சாதியினருக்கு, அதிலும் குறிப்பாக அவரது குடும்பத்தினருக்கு மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. 2 பதவிகள் தலித்துகளுக்கும், 2 பதவிகள் முக்குலத்தோருக்கும் வழங்கப்பட்ட நிலையில் வன்னியருக்கு ஒரே ஒரு பதவி, அதுவும் இரு ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அப்படியானால் திமுக எந்த சமுதாயத்துக்கு ஆதரவான கட்சி?

8. ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மரியாதை கொடுப்பதாகக் கூறும் ஸ்டாலின், அவரது புதல்வர் சம்பத்துக்கு மாவட்ட செயலாளர் பதவியும், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் வழங்கியிருக்கலாமே?

9. வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த வீரபாண்டி ஆறுமுகம், மதுராந்தகம் ஆறுமுகம், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கடைசிக்காலத்தில் அவமதிக்கப்பட்டார்களா, இல்லையா?

10. வன்னியர்கள் பல்வேறு தருணங்களில் நாடகக் காதல் கும்பலால் பாதிக்கப்பட்ட போது, அவர்களுக்கு ஆதரவாக ஸ்டாலின் குரல் கொடுக்காதது ஏன்?  

-ஆகியவை தான் ஸ்டாலினுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் எழுப்பிய வினாக்கள். அவற்றில் ஒரு வினாவுக்குக் கூட உங்கள் அறிக்கையில் பதில் இல்லையே. மாறாக, மருத்துவர் அய்யா அவர்களை மரியாதைக் குறைவாக விமர்சிக்கும் வாசகங்கள் தானே இடம் பெற்றிருக்கின்றன. அப்படியானால், மருத்துவர் அய்யாவையும், வன்னிய மக்களையும் தூற்றுவதற்காக ஸ்டாலின் அமைத்திருக்கும் கூலிப்படையின் புதிய உறுப்பினராகத் தானே நீங்கள் சேர்ந்திருக்கிறீர்கள், அது தானே உண்மை?

திமுகவில் பிற வன்னியத் தலைவர்கள் அவமதிக்கப்பட்டது இருக்கட்டும்... நீங்கள் எந்த அளவுக்கு  அவமதிக்கப்பட்டீர்கள். வட மாவட்ட திமுகவில் வன்னியத் தலைவர்களை ஸ்டாலினுடன் இருக்கும்  இரு முன்னாள் அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் அவமதிக்கிறார்கள் என்று மதுரைக்கு சென்று மு.க. அழகிரியிடம் புகார் கூறி அவரிடம் சரணடைந்தீர்களா, இல்லையா? அதனால், ஆத்திரம் அடைந்த ஸ்டாலினின் துதிபாடிகள் உங்களை மாவட்ட செயலர் தேர்தலில் வீழ்த்த துடித்தனரா, இல்லையா?

கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரின் இல்லத் திருமணத்திற்கான அழைப்பிதழில் தமிழகம்  மட்டுமின்றி புதுவையில் உள்ள மாவட்ட செயலாளர்களின் கூட பெயர்கள் அச்சடிக்கப்பட்டிருந்த நிலையில், அதே மாவட்டத்தைச் சேர்ந்த உங்கள் பெயர் மட்டும் கட்சித் தலைமையின் ஆசியுடன் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டதா, இல்லையா?  உங்கள் அகராதியில் இதற்குப் பெயர் அவமதிப்பு இல்லையா?

மாவீரன் குரு மீது பன்னீர்செல்வத்திற்கு பாசம் வந்திருக்கிறது. மாவீரன் எந்தத் தவறுமே செய்யாத நிலையில், திமுகவின் தவறுகளை தட்டிக் கேட்டார் என்பதற்காக அவரை முதன்முதலில் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது நீங்கள் அமைச்சராக அங்கம் வகித்த அரசு தானே? மாவீரன் மீது இப்போது அக்கறை காட்டும் நீங்கள் அப்போது அவர் மீதான நடவடிக்கையை கண்டித்து அமைச்சர் பதவியிலிருந்தா விலகினீர்கள்? அதுமட்டுமல்ல.... மாவீரன் ஜெ.குருவை படுகொலை செய்ய உங்கள் கட்சித் தலைமை சதித் திட்டம் தீட்டியதே? அதுகுறித்த உண்மைகள் அனைத்தும் உங்களுக்கு தெரிந்திருந்தாலும் அமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக கை கட்டிம் வாய் மூடி அமைதியாக இருந்தவர் தானே நீங்கள். மாவீரனைப் பற்றியெல்லாம் பேச உங்களுக்கு தகுதியில்லை.

அண்ணன் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்களே, நீங்கள் மிகவும் நல்லவர். திமுகவில் எவ்வளவு அடி விழுந்தாலும் வலிக்காதது போலவே காட்டிக் கொண்டு தாங்கிக் கொள்வீர்கள். வன்னியர்கள் அடிமையாகத் தான் இருக்க வேண்டும் என்று கூறினால், தரையை தோண்டி அதற்குள் நின்று கொண்டு உங்கள் தலைமையின் காலைத் தொட்டு வணங்குவீர்கள். ஆனால், எல்லா வன்னியர்களும் அப்படியே  இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள். அவர்களின் பதிலடி விக்கிரவாண்டியில் வலிமையாக இருக்கும்.

நிறைவாக ஒன்றை நினைவூட்டி முடிக்கிறேன். 1989&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை மருத்துவர் அவர்களால் நிறுவப்பட்ட வன்னியர் சங்கம் புறக்கணித்தது. மருத்துவர் அய்யா அவர்களின் அறிவுரைப்படி, ‘‘எந்த கட்சியும் எங்கள் கிராமத்திற்குள் ஓட்டு கேட்க வரக்கூடாது’’ என ஆயிரக்கணக்கான கிராமங்களின் நுழைவாயிலில் மக்கள் எழுதி வைத்திருந்தனர். அதனால் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகியும், உங்கள் தந்தையுமான  எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, தேர்தலில் வாக்களிக்காதவர்கள் எவரும் தமது வீட்டிற்குள் வரக்கூடாது என்று எழுதி வைத்தார். அதைக் கண்டு ஆத்திரமடைந்த நீங்கள், உங்கள் தந்தையை பகைத்துக் கொண்டு, மருத்துவர் அய்யா அவர்களின் நிலைப்பாட்டை ஏற்று, ‘‘தேர்தலில் வன்னியர்கள் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கக்கூடாது’’ என்று ஊர், ஊராக சென்று பிரச்சாரம் செய்தீர்கள். அப்போது உங்கள் வீரமும், தன்மரியாதையும் எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. அப்போது அப்படி இருந்த நீங்கள், திமுகவில் சேர்ந்த பின்னர் எப்படி ஆகி விட்டீர்கள்? என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது. உங்களுக்காக நாங்கள் வருந்துகிறோம்.

இனி வரும் நாட்களிலாவது நீங்கள் பழைய பன்னீர்செல்வமாக மாற வேண்டும்; பழைய வீரத்தையும்,  தன்மரியாதையையும் பெற வேண்டும். அதை விடுத்து கழகத் தலைவரின் கனவுத் தோழராக மாறி, 2021 குறித்த கனவுகளில் மூழ்கி இருந்தால், உங்களுக்கு அரசியல் அடையாளத்தை எந்த சமுதாய மக்கள்  கொடுத்தார்களோ, அதே மக்கள் உங்களின் அரசியலுக்கு முடிவுரை எழுதுவர். அது உறுதி!" என வைத்தி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Vaithi Replies to DMK MRK paneerselvam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->