தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே... அன்புமணி இராமதாஸ் பரபரப்பு அறிக்கை!
PMK Anbumani Ramadoss TN Caste Survey Census
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "இந்தியாவில் அடுத்து நடத்தப்படவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். சமூகங்களின் நிலைமையை படம் பிடித்துக் காட்ட வகை செய்யும் இந்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது ஆகும்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அடுத்து நடத்தப்படவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார். இப்படி ஓர் அறிவிப்பு எப்போது வரும் என பல பத்தாண்டுகளாக காத்திருந்தவன் என்ற முறையில் மத்திய அரசின் இந்த முடிவு எனக்கு பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்படவிருக்கும் இந்த சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இனிவரும் காலங்களில் இட ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பை தகர்ப்பது உள்ளிட்ட பல்வேறு சமூகநீதிப் புரட்சிகளுக்கு வழிவகுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்தியாவில் கடைசியாக 1931&ஆம் ஆண்டு தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனடிப்படையில் தான் இந்தியாவில் இன்று வரை இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அண்மைக்காலத்திய சாதிவாரி மக்கள்தொகை விவரங்கள் இல்லை என்பதைக் காரணம் காட்டியே பல சமூகங்களுக்கும் உள் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வந்தது. அந்த சமூகநீதிக்கு இந்தக் கணக்கெடுப்பு முடிவு கட்டும்.
தேசிய அளவிலும், மாநில அளவிலும் சாதிவாரி மக்கள்தொகை நடத்தப்பட வேண்டும் என்று சுமார் அரை நூற்றாண்டு காலமாக குரல் கொடுத்து வந்தது வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் தான். 45 ஆண்டுகளுக்கு முன் 1980&ஆம் ஆண்டில் வன்னியர் சங்கத்தை மருத்துவர் அய்யா அவர்கள் தொடங்கிய போது நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதனடிப்படையில் இட ஒதுக்கீடு நடத்தப்பட வேண்டும் என்பது தான். அன்று தொடங்கி இன்று வரை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக பல நூறு போராட்டங்கள், கருத்தரங்குகள், மக்கள் இயக்கங்கள் என ஏராளமான முயற்சிகளை பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டிருக்கிறது.
வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டதற்கு பிந்தைய 45 ஆண்டுகளில் இராஜிவ் காந்தி, வி.பி.சிங் , வாஜ்பாய், மன்மோகன்சிங், நரேந்திர மோடி ஆகிய 5 பிரதமர்களை மருத்துவர் அய்யா அவர்கள் பலமுறை சந்தித்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். பலமுறை கடிதங்கள், கோரிக்கை மனுக்கள், போராட்டங்கள் என பல வடிவங்களில் மருத்துவர் அய்யா அவர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். இடைவிடாமல் மேற்கொள்ளப்பட்ட அந்த முயற்சிகளுக்குத் தான் இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி பெருமிதம் கொள்கிறது.
அதேநேரத்தில் மத்திய அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவிருப்பதைக் காரணம் காட்டி, தமிழக அரசு அதன் பங்குக்கு சாதிவாரி சர்வே நடத்தும் கடமையிலிருந்து தப்பிவிட முடியாது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்படும் என்பதை மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது எவ்வளவு விவரங்கள் சேகரிக்கப் பட்டனவோ, அதை விட கூடுதலாக ஓபிசி சாதி குறித்த விவரம் சேகரிக்கப்படும். இது சாதிவாரி மக்கள்தொகையை அறிவதற்கு மட்டும் தான் பயன்படுமே தவிர, சமூகநிலையை அறிவதற்கு உதவாது.
2011&ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது ஒட்டுமொத்தமாக 30 வினாக்கள் மட்டுமே எழுப்பப்பட்டு விவரங்கள் பெறப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை பிறப்பு விவரம், முகவரி, குடும்ப உறுப்பினர் விவரங்கள், எழுத்தறிவு, இடம் பெயர்ந்தவரா? தொழில் ஆகியவை தான். ஒருவரின் சமூக பின்தங்கிய நிலையை அறிவதற்கு இந்த புள்ளி விவரங்கள் மட்டுமே போதுமானவை அல்ல.
அதனால் தான் சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு மாநில அளவிலும் சாதிவாரி சர்வே எடுக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன். தேசிய அளவில் எடுக்கப்படும் கணக்கெடுப்பு மனித தலைகளை சாதிவாரியாக எண்ணும் நடைமுறை தான். இது சமூகநீதி சார்ந்த கொள்கைகளை வகுப்பதற்கு மட்டுமே பயன்படும். மாநில அளவில் உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு இன்னும் அதிகமான தரவுகள் தேவை. அதனால் தான் தெலுங்கானாவில் அண்மையில் நடத்தப்பட்ட சாதிவாரி சர்வேயில் 56 முதன்மை வினாக்கள், 19 துணை வினாக்கள் என மொத்தம் 75 வினாக்கள் எழுப்பி விவரங்கள் பெறப்பட்டன.
தமிழ்நாட்டில் பல சாதிகள் உள் இட ஒதுக்கீடு கோருகின்றன. அவற்றுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்றால், அந்த சாதி மக்களின் சமூ பின்தங்கிய நிலை தரவுகளின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். எனவே, மாநில அரசின் சார்பில் சாதிவாரி சர்வே நடத்தப்பட்டு இத்தகைய விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். அதற்காக 2008 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்துவதற்கான அறிவிப்பை, மத்திய அரசின் கணக்கெடுப்பு தொடங்கப் படுவதற்கு முன்பாகவே தமிழக அரசு வெளியிட்டு கணக்கெடுப்புப் பணிகளை தொடங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss TN Caste Survey Census