நீட் மறுதேர்வு அச்சத்தால் 2 நாள்களில் இரு மாணவிகள் தற்கொலை: மாணவர்கொல்லி நீட் தேர்வை ஒழிப்பது மட்டும் தான் ஒரே தீர்வு - அன்புமணி இராமதாஸ்!
pmk anbumani ramadoss neet exam
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரால் ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு நாளை மறுநாள் மீண்டும் நடத்தப்படவுள்ள நிலையில், அத்தேர்வின் முடிவுகள் என்னவாகுமோ? என்ற அச்சத்தில் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிகா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மாணவி கோபிகாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த கோபிகா கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியும் குறைந்த மதிப்பெண்களையே பெற்றதால், அவரால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. அதனால், நடப்பாண்டில் மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி, இம்முறையும் நம்மால் வெற்றி பெற முடியாதோ? என்ற அச்சம் மற்றும் கவலை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே கடந்த 17-ஆம் தேதி கோவையை சேர்ந்த மாணவி அனுகீர்த்தனா இதே காரணத்தால் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதனால் ஏற்பட்ட கவலையும், பதட்டமும் விலகும் முன்பே அடுத்த மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இரு நாள்களுக்குள் இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
2017-ஆம் ஆண்டில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு கடந்த பத்தாண்டுகளில் தேசிய அளவில் 200-க்கும் மேற்பட்டோரும், தமிழ்நாட்டில் 40 பேரும் அத்தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மாணவர்களின் தற்கொலைக்கு வழி வகுத்ததைத் தவிர மாணவர் கொல்லி நீட் தேர்வால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
English Summary
pmk anbumani ramadoss neet exam