8ம் வகுப்பு மாணவன் மது போதையில் கலாட்டா: இது தான் திமுகவின் சாதனையா? மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் - அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin drug school student
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த கதிராமங்கலத்தில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் தள்ளாத குடிபோதையில் அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசும் காணொலி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்தக் காணொலியை காண்பதற்கே மனம் வலிக்கிறது. திருக்குறளில் கள்ளுண்ணாமை அதிகாரத்தை படித்து, ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி முன்னேற வேண்டிய தமிழ்நாட்டின் எதிர்காலத் தூண்களை இப்படி ஒரு நிலைக்கு திமுக அரசு தள்ளியிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டு மாணவர்களின் நலனுக்காக வானத்தை வில்லாய் வளைத்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டன் டன்னாய் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு வருகிறார். ஆனால், மாணவர்களின் நலனுக்காக அவர் எதையும் செய்யவில்லை. மாறாக அவர்களுக்குத் தேவையான தரமான கல்வியை வழங்காமல், தேவையற்ற மதுவைத் திணித்து அவர்களின் எதிர்காலத்தைச் சீரழித்தது தான் திமுக அரசின் சாதனையாகும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் தரமான கல்விக் கட்டமைப்புகள் இல்லை. அரசு பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை. 5 வகுப்புகள் கொண்ட பள்ளிகளில் ஒரே ஆசிரியர் அல்லது இரு ஆசிரியர்கள் மட்டும் தான் உள்ளனர். ஆனால், பத்துக்கு பத்து மட்டுமே இட வசதி கொண்ட டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையை அதிகரிப்பதற்காக 3 முதல் 5 பணியாளர்களை திமுக அரசு நியமித்திருக்கிறது. இதுவா மாணவர் நலன் காக்கும் அரசு?
ஒரு மாணவன் அவனது வீட்டில் இருந்து பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்குள் குறைந்தது இரு மதுக்கடைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது. எந்த ஒரு பொருளும் எளிதாக கிடைப்பது தான் அதற்கு மக்கள் அடிமையாவதற்கு காரணம் என்று உலகம் முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகள் கூறுகின்றன. அந்த வகையில் கைக்கெட்டும் தொலைவில் மது தாராளமாக கிடைக்கும் போது அதற்கு மாணவர்கள் அடிமையாவது வழக்கம். மதுவை தெருக்கள் தோறும் வெள்ளமாக ஓடவிட்ட திமுக அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
தனியார் பள்ளி மாணவர் நேரடியாக மதுக்கடையில் மது வாங்க வில்லை என்றும், கல்லூரி மாணவர் ஒருவர் தான் மதுவை வாங்கி பள்ளி மாணவருக்கு கொடுத்து குடிக்க வைத்ததாகவும் ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கும் திமுக அரசு, அதற்காக கல்லூரி மாணவரை கைது செய்திருக்கிறது. கைது செய்யப்பட்ட மாணவருக்கு இன்னும் 21 வயது ஆகவில்லை. தமிழ்நாடு அரசு வகுத்துள்ள விதிகளின்படி 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது; அனைத்து மதுக்கடைகளிலும் 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யப்படாது என்ற வாசகம் எழுதப்பட்ட அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும்.
இதையெல்லாம் திமுக அரசு செய்ததா? அவ்வாறு செய்திருந்தால் கல்லூரி மாணவருக்கு மது கிடைத்தது எப்படி? கல்லூரி மாணவருக்கு மது வணிகம் செய்த பணியாளர் முதல் அதை உறுதிப்படுத்தத் தவறிய முதலமைச்சர் வரை அனைவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இதை முதலமைச்சர் செய்வாரா? இதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா?
திமுகவின் தேர்தல் அறிக்கையை சூப்பர் ஸ்டார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், அதில் மதுவிலக்கு குறித்தோ, போதைப் பொருள் ஒழிப்பு குறித்தோ ஒரே ஒரு வார்த்தைக் கூட கூறப்படவில்லை. அப்படியானால், மாணவர்களை மதுவுக்கும், போதைக்கும் அடிமையாக்குவது தான் சூப்பர் ஸ்டாரின் வேலையா? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எத்தனை அரிதாரங்களை பூசி வந்தாலும் நாட்டைக் கெடுத்த அவருக்கு தமிழ்நாட்டு மக்கள் வழங்கவிருக்கும் பரிசு படுதோல்வி தான்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin drug school student