ஆர்எஸ்எஸ் பேரணிகளுக்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்; சிபிஎம் பெ.சண்முகம்..!
P Shanmugam states that the Tamil Nadu government should file an appeal against the High Court verdict that granted permission for RSS rallies
ஆர்எஸ்எஸ் பேரணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்று கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென்றும், உரிய முறையில் வழக்கை நடத்த வேண்டுமென்றும், சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''ஆர்எஸ்எஸ் தனது வளர்ச்சிக்கு வன்முறையை ஒரு வழிமுறையாக வைத்திருக்கிறது. தமிழ்நாட்டின் கோவை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வன்முறைகளுக்குப் பிறகே அது காலூன்றியது.
ஆர்எஸ்எஸின் நடவடிக்கைகள் அது சிற்சில நேரங்களில் செய்யும் பேரிடர் நிவாரண உதவிகள் அல்லது அவற்றை செய்தது போன்று சித்தரிக்கப்பட்ட பொய்கள் ஆகியவற்றை ஆயுதமாகக் கொண்டு தன்னை ஒரு அரசியல் சார்பற்ற அமைப்பு போல காட்டிக் கொள்ள முனைகிறது.
குடிமக்கள் அமைப்பு என்று வரையறுத்து அவர்களின் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்குவது வன்முறைக்கான வித்துக்களை தூவுவதே ஆகும். எந்தவொரு அமைப்பும் குறிப்பிட்ட பேரணிக்கு அனுமதி கோரினால் அதன் மீது நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். ஆனால், ஆர்எஸ்எஸ்க்கு அனுமதியளித்து தீர்ப்பளித்த நீதிமன்றம் இனிமேல் ஆர்எஸ்எஸ் அனுமதி பெற நீதிமன்றத்தை நாடவிடாதீர்கள் என்பது சூழ்நிலைகளைப் பற்றி கவலைப்படாமல் அனுமதியளிக்க வேண்டுமென்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
ஆர்எஸ்எஸ்-ஆல் கடந்த காலங்களில் நடைபெற்ற வன்முறைகளைப் பற்றி கவலையின்றி நீதிமன்றம் இப்படி தீர்ப்பு சொல்லியிருப்பது கவலையளிக்கிறது.
எனவே, ஆர்எஸ்எஸ் பேரணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்று கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென்றும், உரிய முறையில் வழக்கை நடத்த வேண்டுமென்றும், அமைதிப் பூங்காவாக திகழும் தமிழ்நாட்டை காப்பதற்கு இது அவசியம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.''என்று சிபிஎம் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.
English Summary
P Shanmugam states that the Tamil Nadu government should file an appeal against the High Court verdict that granted permission for RSS rallies