இது ஆட்சி நிர்வாகமா? ரீல்ஸ் காட்சி நிர்வாகமா? தவெக அரசை விமர்சித்துள்ள வேல்முருகன்..! - Seithipunal
Seithipunal


''பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. விலைவாசி உயர்விலிருந்து நிம்மதி இல்லை. போதைப் பொருள் அச்சத்திலிருந்து விடுதலை இல்லை. இது ஆட்சி நிர்வாகமா? ரீல்ஸ் காட்சி நிர்வாகமா?என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் விமர்சித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

''தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து அச்சமும் கேள்விகளும் எழுந்து வரும் நிலையில், இரண்டு சம்பவங்கள் ஒட்டுமொத்த சமூகத்தின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன.

குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காகப் பணிக்குச் சென்ற 26 வயது பெண் செவிலியர் உத்திரா காணாமல் போய், பின்னர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெற்றோருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி அதிகாலையில் காணாமல் போன சம்பவத்தில், அவரை மீட்க காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து தேடி வருகின்றனர். வீட்டுக்குள் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த பெண் குழந்தைக்கே பாதுகாப்பு இல்லை என்றால், தமிழகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு எங்கே?

குடும்பத்தின் வளர்ச்சிக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் பணிக்குச் சென்ற பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லை என்றால், உழைக்கும் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் என்ன? ஒரு பெண் வீட்டுக்குள் இருந்தாலும் பாதுகாப்பில்லை, பணிக்காக வெளியில் சென்றாலும் பாதுகாப்பில்லை என்ற நிலை உருவானது எப்படி?

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவிக்கும் நிலையில், பெண்களும் குழந்தைகளும் அச்சமின்றி வாழும் சூழல் இல்லையே ஏன்?

பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படாத நிலையில் ‘சிங்கப்பெண்’ படை எதற்காக? வெற்றிப் பயணத்தில் வெளியே செல்லும் பெண்கள், பாதுகாப்புடன் வீடு திரும்பி வர உத்தரவாதம் இருக்கிறதா?

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. விலைவாசி உயர்விலிருந்து நிம்மதி இல்லை. போதைப் பொருள் அச்சத்திலிருந்து விடுதலை இல்லை. இது ஆட்சி நிர்வாகமா? ரீல்ஸ் காட்சி நிர்வாகமா?

இதே நிலை நீடித்தால், பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ படையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கே முழுமையான பாதுகாப்பு இருக்குமா என்பதும் கேள்விக்குறியாகிவிடாதா?

எனவே, காணாமல் போன சிறுமி ஹேமாவதியை விரைந்து, பாதுகாப்பாக மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். உத்திராவின் மரணம் தொடர்பான விசாரணையைத் துரிதப்படுத்தி, அவரது மரணத்திற்கான முழுமையான காரணத்தை வெளிக்கொண்டு வந்து, குற்றத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும்.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறை கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். பெண்கள் பணிபுரியும் இடங்களுக்கும், அவர்கள் பயணிக்கும் வழித்தடங்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்.

போதைப் பொருள் புழக்கத்தைத் தடுப்பதற்கும், சட்டம்- ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும் கடுமையான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.'' என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Velmurugan criticizes the TVK led government


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->