அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்; புதிய கட்சியை தொடங்கியுள்ள ஓ.பன்னீர்செல்வம்..!
O Panneerselvam has launched a new party
அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். அதிமுகவில் இருந்துபிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று குரல் கொடுத்து வரும் ஓபிஎஸ், தான் நடத்தி வந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை தற்போது கழகமாக மாற்றியுள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறி வருவதோடு, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் ஒரு அமைப்பையும் செயல் படுத்திவந்தார்.
அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக் கொள்ளமுடியும், இணைத்துக்கொள்வார் என்ற முனைப்பில் இருந்த ஓபிஎஸ், அதில் எவ்வித முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. இதனை தொடர்ந்து கடும் அதிருப்தியில் இருந்த அவர், கடந்த 15-ஆம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக கூறினார்.

அந்த கூட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்து அவர், டிச,பார் 24-ஆம் தேதி புரட்சிதலைவர் எம்ஜிஆர் நினைவு தினத்தில் தமது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வை அறிவிப்பதாக தெரிவித்தார்.
அதன்படி, இன்று திடீர் திருப்பமாக, புதிய கட்சியை ஓபிஎஸ் தொடங்கியுள்ளார். தனது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி புதிய கட்சியாக மாற்றியுள்ளார்.
இருப்பினும் அமைப்பை கட்சியாக மாற்றியுள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், மாறாக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, 'தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் ஊழியர்களை திமுக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தி அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதன்காரணமாகவே, அவர் அந்த அமைப்பை முதல் முறையாக கழகமாக மாற்றி அறிக்கையாக வெளியிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. ஆனாலும், இந்த அறிக்கையில் கட்சி தலைவர், பொதுச் செயலாளர் யார் என்பன உள்ளிட்ட எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை.
வழமைபோலவே, கழக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதல்வர் என்று தமது பொறுப்புகளை மட்டும் குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளார். தமது கட்சியை அவர் முறைப்படி தேர்தல் கமிஷனில் பதிவு செய்துவிட்டாரா என்பது குறித்தும் எவ்வித தகவல்களும் வெளியாவில்லை.
கடந்த 14-ஆம் தேதி தான் நடத்தி வரும் அமைப்பின் பெயரில் கடைசியாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் தலைமைக் கழகம், 154, பசுமை வழிச்சாலை, ராஜா அண்ணாமலைபுரம்,சென்னை-600028 என்ற முகவரி இடம்பெற்று இருந்தது.
தற்போது அமைப்பை கழகமாக மாற்றி அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் முகவரி மாறி இருக்கிறது. இதில் தலைமைக்கழகம், 38/31, 38/2, சேமியர்ஸ் ரோடு, நந்தனம், சென்னை- 600035 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், இரண்டு அறிக்கையிலும் 93423 14327 என்ற செல்போன் எண் மட்டும் மாறாமல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
O Panneerselvam has launched a new party