உள்ளூர் இளைஞர்கள் புறக்கணிப்பு! நெய்வேலி TAQA POWER PLANTS நிறுவனத்தின் சதி! டாக்டர் இராமதாஸ் கடும் கண்டனம்!
NLC AQA POWER PLANTS PMK Ramadoss Condemn
பாமக நிறுவனர், தலைவர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "நெய்வேலி TAQA POWER PLANTS நிறுவனமானது, உள்ளூர் கிராமப்புற இளைஞர்களைப் புறக்கணித்து வெளி ஆட்களை கொண்டு வந்து வேலை செய்ய வைப்பது, மோசமான முன்னுதாரணம். உள்ளூர் கிராமத்து இளைஞர்களையும், வெளியூர் ஆட்களையும் மோதவிடும் நரித்தந்திரமாகவே இதை பார்க்கிறேன்.
நிறுவனத்தின் 'இயந்திரமற்ற' பணி நாட்களிலும் (SHADOWN PERIOD), உள்ளூர் ஊத்தங்கால் கிராம மற்றும் சுற்றுப்புற கிராமத்தின் 500- க்கு மேற்பட்ட இளைஞர்களே இதுநாள் வரை வேலை பார்த்து வந்திருக்கிறார்கள். இந்த ஆண்டு (2025) இதை மாற்றி வெளியூர் ஆட்களுக்கு வேலையை கொடுத்திருப்பதின் உள்நோக்கம் தெரியாமல் இல்லை.
நிறுவனத்தின் விஷக்கழிவுகளால் பாதிக்கப்பட்டு ஏற்கெனவே 50- க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள், சிறுநீரக செயலிழப்பால் டயாலிசிஸ் (ரத்த சுத்திகரிப்பு) செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான மருத்துவ முகாம் நடத்தி இலவச டயாலிசிஸ் மேற்கொள்ளவும், விஷக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றவும் துரும்பளவு கூட முன்வராத TAQA POWER PLANT நிர்வாகம், அவர்களின் வாழ்வாதாரத்திலும் தற்போது விளையாடுவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தோருக்கு பணி நிரந்தரம், ஒப்பந்தப் பணிகளில் முன்னுரிமை போன்றவற்றை உறுதிப்படுத்திட நிறுவனம் உடனடியாக முன்வர வேண்டும்.
ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தை மாதக்கணக்கில் முடிவு தெரியாமலே இழுத்துக் கொண்டிருக்கிற சூழலில் இந்த, "வெளியூர் ஆள் எடுப்பு" அஸ்திரங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு நியாயமான முறையில் நிர்வாகத்தின் செயல்பாடு மாற்றிக் கொள்ளப்பட வேண்டும்" என மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
NLC AQA POWER PLANTS PMK Ramadoss Condemn