'தோட்டக்கலைத் துறையிலும் தொடரும் முறைகேடுகள்: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்': திமுக அரசை வலியுறுத்தியுள்ள நயினார் நாகேந்திரன்..! - Seithipunal
Seithipunal


தோட்டக்கலைத்துறை குறித்தெல்லாம் யார் கேள்வி கேட்கப் போகிறார்கள் என்ற அலட்சியத்தில் திமுக அரசு தனது ஊழல் கரங்களை அதில் பரவவிட்டுள்ளதாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தோட்டக்கலைத் துறையில் தொடரும் முறைகேடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழக்கம் போல வெள்ளை பேப்பரைத் தூக்கிக் காட்டாமல், விரிவான வெள்ளை அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் என வலிறுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''தோட்டக்கலைத் துறையில் தோண்டத் தோண்ட ஊழல் ஊற்று பெருகுகிறது. கடந்த ஆண்டு தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், தோட்டக்கலை மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளை ஆதரிக்கும் நோக்கில் தமிழகத்திற்கு ரூ.136 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், அதில் திமுக அரசு கணிசமானத் தொகையைக் கையாடல் செய்துவிட்டதாகவும் வெளிவரும் செய்திகள் மூலம் திமுகவின் ஊழல் மகுடத்தில் இது மற்றொரு கருங்கல்லாகவே தெரிகிறது.

தோட்டக்கலைத்துறை குறித்தெல்லாம் யார் கேள்வி கேட்கப் போகிறார்கள் என்ற அலட்சியத்தில் திமுக அரசு தனது ஊழல் கரங்களை அதில் பரவவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதிலும் குறிப்பாக அதிகாரிகளுக்கு உணவு கொடுத்தோம். தேநீர் வழங்கினோம். போக்குவரத்திற்கு உதவினோம் என்று கூறி போலிக் கணக்கு காட்டி ரூ.75 கோடியையும், தென்னை வேர் வாடல் நோய் தடுப்புப் திட்டத்தின் கீழ் ரூ.60 கோடியையும், தேனீ வளர்க்கிறோம், மகரந்தச் சேர்க்கை செய்கிறோம் என்று கூறி டெண்டரே விடாமல் ரூ.6 கோடியையும் அரசு ஊழல் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் வரிசை கட்டி நிற்கும் பொழுது, முதல்வரும் வேளாண்மைத் துறை அமைச்சர் பன்னீர்செல்வமும் இதுவரை ஏன் பதிலளிக்கவில்லை?

தமிழகத் தோட்டக்கலைத்துறையின் கீழ் குறிப்பிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதற்கான ஆவணங்கள் எங்கே போயிற்று? வாய் வலிக்குமளவிற்கு மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்ற வதந்தியை மக்களிடையே பரப்பிவரும் திமுக அரசு, இந்த விவகாரத்தில் கனத்த மவுனம் காப்பது ஏன்?

பதவிக்காலம் முடிவதற்குள் பாதாளம் வரை சென்று கொள்ளையடித்துவிடத் துடிக்கும் திமுகவின் ஊழல் வரலாறு நமக்குத் தெரியாதா என்ன? எனவே, வழக்கம்போல வெள்ளை பேப்பரைத் தூக்கிக் காட்டி உருட்டாமல் தோட்டக்கலைத் துறையின் செலவினங்கள் மற்றும் டெண்டர் நடைமுறைகள் குறித்து விரிவான வெள்ளையறிக்கையை உடனே வெளியிட வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.''என்று அறிக்கையில் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nainar Nagendran says a white report should be published on the ongoing irregularities in the horticulture sector


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->