மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்தை ஏற்றுக்கொண்டு, ''நான் சட்டவிரோத முதல்வர்'' என்பதை ஒப்புக்கொண்டு விஜய் பதவி விலகத் தயாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..? - Seithipunal
Seithipunal


எஸ்ஐஆர் நடைமுறைக் பிறகு பதவிக்கு வந்தவர்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் என்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் கருத்தை ஏற்றுக்கொண்டு, ''நான் சட்டவிரோத முதல்வர்'' என்பதை ஒப்புக்கொண்டு விஜய் பதவி விலகத் தயாரா? என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;

''எஸ்ஐஆருக்கு எதிராக போர்க்கொடி பிடிக்கிறதா தவெக? கூட்டணி விசுவாசத்துக்காக இந்திய அரசியலமைப்பை எதிர்க்க துணிந்துவிட்டாரா முதல்வர் விஜய்?

அனைத்து மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் வகையில், போலி வாக்காளர்களை கண்டறிதல், வாக்காளர் கணக்கெடுப்பு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு உட்பட பல செயல்முறைகளை முன்னெடுத்து வரும் எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றுள்ள தவெகவுக்கு எனது கடும் கண்டனங்கள்.

நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி, கிராமசபை என நாடு முழுவதிலும் நடக்கும் அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்து வரும் காங்கிரஸ், தங்கள் கையாலாகாத்தனத்தை மறைக்க தேர்தல் ஆணையத்தின் மீதும், எஸ்ஐஆர் மீதும், இவிஎம் இயந்திரங்கள் மீதும் பழி போட்டு வருகிறது.

"வாக்கு திருட்டு" நடந்ததற்கான ஆதாரங்களைக் கேட்டால், "ஆடு திருடு போகவில்லை, திருடு போன மாதிரி கனவு கண்டேன்" என்ற நகைச்சுவை வசனம் போல, "எந்த ஆதாரமும் இல்லை, ஆனால் நான் உணர்கிறேன்" என்று மழுப்புகிறார் ராகுல் காந்தி.

இப்படிப்பட்டவர்களுடன் இணைந்து கொண்டு, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள முதல்வர் விஜய், எஸ்ஐஆருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பது, மிகப் பெரிய அரசியல் பிழை. மண் குதிரையை நம்பி யாராவது நட்டாற்றில் இறங்குவார்களா?

மேலும், கேரளாவைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் சென்னிதலா, எஸ்ஐஆர்- யை வரவேற்றுள்ளார். எஸ்ஐஆர் - க்குப் பிறகு, கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது, தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தது, அரை நூற்றாண்டுக்கு பிறகு காங்கிரஸுக்கு தமிழக அமைச்சரவையில் இடமும் கிடைத்தது.

அதுமட்டுமன்றி, எஸ்ஐஆர் மூலமாக, நிரந்தரமாக இடம்பெயர்ந்த வாக்காளர்கள், இறந்த வாக்காளர்கள், இரட்டை வாக்குரிமை கொண்டவர்கள் உட்பட சுமார் 13 கோடி பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அப்படியென்றால், இறந்த வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைத் தக்க வைத்துக்கொண்டு தனக்கு வாக்களிக்க வேண்டும் என ராகுல் காந்தி விரும்புகிறாரா? முதல்வர் விஜய் அதை ஆமோதிக்கிறாரா?

மேலும், எஸ்ஐஆருக்குப் பிறகு பதவிக்கு வந்தவர்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் என்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் கருத்தை தவெக ஏற்றுக்கொள்கிறதா? ‘நான் சட்டவிரோத முதல்வர்’ என்பதை ஒப்புக்கொண்டு விஜய் பதவி விலகத் தயாரா?''எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nainar Nagendran questions whether CM Vijay is prepared to resign by accepting Mallikarjun Kharges views regarding the SIR issue


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->