'குதிரை பேரம் நடத்தி வரும் இந்த அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்'; நயினார் நாகேந்திரன் விமர்சனம்..! - Seithipunal
Seithipunal


'' தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் முன்பே அமமுக உறுப்பினரை விலை பேசி வாங்கினர். தற்போது குதிரை பேரம் நடத்தி சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி வருகின்றனர். உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது வேறு, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது வேறு'' என தவெக அரசை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாளையங்கோட்டை பெருமாள்புரத்திலுள்ள அவரது இல்லத்தில் மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 35 நாட்கள் ஆகியுள்ள நிலையில், பாலியல் குற்றச் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. கடந்த 02 நாட்களில் மட்டும் 17 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்று சுட்டிக்காட்டி பேசியுள்ளார். 

முன்னதாக சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது "ப்ரோ", "அங்கிள்" என்றெல்லாம் பேசிய முதல்வர் விஜய், இந்த சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தச் சம்பவங்கள் எல்லாம் முதல்வருக்கு தெரியுமா என்று தெரியவில்லை என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன், இதுகுறித்து வாயே திறக்காமல் முதல்வர் காலை 10 மணிக்கு தலைமைச் செயலகம் வருகிறார். மாலை 05 மணிக்கு வீட்டுக்கு செல்கிறார். டிபன், சாப்பாடு சாப்பிடுகிறார் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் காட்சிகளை பதிவிடுகிறார்கள். ஆனால், மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதில்லை என்றும், தற்போது சினிமா பிரபலங்களை மட்டும் சந்தித்து புகைப்படம் எடுக்கிறார் என்று முதல்வர் விஜய்யை சாடியுள்ளார்.

அத்துடன், தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வரும் முன்பே அமமுக உறுப்பினரை விலை பேசி வாங்கினர். தற்போது குதிரை பேரம் நடத்தி சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளதோடு, உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது வேறு, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது வேறு. எம்எல்ஏக்களை வாங்குவதால் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகிறது. அரசின் பணம் வீணாகிறது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், குதிரை பேரம் நடத்தி வரும் இந்த அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்றும், அதிமுக எம்.எல்.ஏ.க்களை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து விலை பேசி வாங்கி வருகிறார். இது நீண்ட நாட்கள் நீடிக்காது. இது தவறான செயல் என்று கூறியுள்ளார்.

மேலும், வரும் காலம் பாஜகவின் காலமாக இருக்கும் என்றும், விஜய்க்கு அரசியல் முதிர்ச்சி இல்லை. விஜய், அண்ணாமலை போன்றோர் புதிய கட்சி தொடங்கியதால் பா.ஜ.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேப்போன்று கடந்த 12 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி நடத்தி வருகிறார் என்றும், நடிகர் ரஜினிகாந்துடன் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என்றும், கடந்த ஆட்சியை போலவே தற்போதைய ஆட்சியிலும் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முதல்வர் தவறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது காலையில் ஓர் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது, மாலையில் அது திரும்ப பெறப்படுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், சிவகங்கையில் அந்த குழுவில் இருந்த பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.

அதேப்போன்று அண்ணாமலைக்கு 17 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று கூறுகிறார்கள். ஒரே நாளில் எனக்கும் 30 லட்சம் பேர் ஆதரவாக உள்ளனர் என்று என்னால் காட்ட முடியும் என்று கூறியுள்ளார்.

அத்துடன், திமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்குமா என்று கேட்கிறீர்கள். தேர்தல் நேரத்தில் அதுகுறித்து பதில் தெரிவிப்போம் என்றும், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோதும், தற்போது சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதும் அவரது செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nainar Nagendran has criticized the government stating that this administration which is engaged in horse trading must be removed from power


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->