மறைந்த நாகலாந்து ஆளுநர் இல கணேசன் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!
Nagaland Governor Ila Ganesan
நாகாலாந்து ஆளுநராக இருந்த இல. கணேசன் (80) நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் சென்னை வந்தார். கடந்த 8ஆம் தேதி அதிகாலை தலைச்சுற்றல் ஏற்பட்டு விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதால், அவரை சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு தீவிர கண்காணிப்பில் வைத்திருந்த போதிலும், சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று இரவு காலமானார்.
அவரது உடல் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் தியாகராய்நகரில் உள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்ட முக்கிய அரசியல், சமூக தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், இன்று பிற்பகலில் இறுதி ஊர்வலமாக அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு, அரசு மற்றும் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இல. கணேசன் மறைவையொட்டி, நாகாலாந்து அரசு ஏழு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Nagaland Governor Ila Ganesan