'இந்தியா கூட்டணிக்கு திமுகவும் தமிழக வெற்றி கழகமும் வர வேண்டும்'; கார்த்தி சிதம்பரம் எம்.பி...!
MP Karthik Chidambaram states that the DMK and the Tamilaga Vettri Kazhagam should join the INDIA alliance
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. கலந்துகொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
தமிழ்நாட்டில் திமுகவும், தமிழக வெற்றிக்கழகமும் இந்தியா கூட்டணியில் தனித்தனியாக செயல்படலாம் என்றும், பல்வேறு மாநிலங்களில் தனித்தனியாக செயல்படுகின்றனர் என்று கூறியுள்ளார். அத்துடன், இந்தியா கூட்டணிக்கு திமுகவும் தமிழக வெற்றி கழகமும் வர வேண்டும். நாடாளுமன்றத்தில் இருக்கை மாற்றியதற்கு ஒரு சிறிய கோபம் திமுகவுக்கு இருக்கலாம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், விஜய் முதன்முதலாக சட்டமன்றத்திற்கு வந்துள்ளார். அவருக்கு கொஞ்ச நாள் அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும், எடுத்தவுடன் அனுபவம் வந்துவிடாது. போகப் போகத்தான் அனைவருக்கும் அனுபவம் வரும். இரண்டு மூன்று நாளிலேயே விமர்சனம் வைப்பது தேவையில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் அதிமுக இரண்டாகப் பிரிந்ததற்கு காரணம் பாஜகவும் இருக்கலாம் அல்லது இன்றைய சூழலாகவும் இருக்கலாம் என்று கூறியதோடு, எடப்பாடி தலைமையில் நான்கு தேர்தலில் தொடர் தோல்வியை அடைந்து, மூன்றாவது கட்சியாக தள்ளப்பட்டுள்ளது. சரித்திரத்தில் அதிமுக மூன்றாவது கட்சியாக இருந்ததில்லை. இனி வருங்காலங்களில் எடப்பாடி தலைமையில் வர முடியுமா என்ற சந்தேகத்தில் கூட இப்படி நடந்திருக்கலாம் என்று பேசியுள்ளார்.
மேலும், ஒரு நடிகர் வெற்றி பெற்றதாக மற்ற நடிகர் வெற்றி பெறுவார்கள் என்று கூற முடியாது எனவும், நடிகர் வெற்றி பெற்றதற்கு 10 நடிகர் தோல்வியடைந்ததை காட்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மோடி எதற்கு ஏழு அட்வைஸ்கள் கொடுத்துள்ளார் என்பது தெரியவில்லை என்றும், அதற்காகத்தான் பாராளுமன்றத்தை கூட்ட சொல்லியுள்ளோம். உலகத்தில் கச்சா எண்ணெய் பிரச்சினை முழுவதுமாக இருக்கிறது. அங்கெல்லாம் பிரச்சினை இல்லாத போது இங்கு மட்டும் பிரதமர் மோடி பேசினாலே அனைவருக்கும் பீதி வரத்தான் செய்யும் என்று கார்த்திக் சிதம்பரம் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
English Summary
MP Karthik Chidambaram states that the DMK and the Tamilaga Vettri Kazhagam should join the INDIA alliance