வேலையை காட்ட தொடங்கிய தோழர்கள்!ஆட்சி கலைப்பு.. ஆளுநர் வெயிட்டிங்?தோழர்களுக்கு பதிலடி கொடுத்த தவெக!
Minister Rajamohan hits back at Mutharasan remark
கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவால்தான் தமிழக வெற்றி கழக அரசு நடைபெற்று வருவதாகவும், இடதுசாரி கட்சிகள் ஆதரவைத் திரும்பப் பெற்றால் ஆட்சி நீடிக்காது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு அமைச்சர் ராஜமோகன் பதிலடி கொடுத்துள்ளார். பெண்கள், வாக்காளர்கள் மற்றும் சாமானிய மக்களின் ஆதரவில்தான் இந்த அரசு அமைந்துள்ளதாகவும், வேறு எந்தக் கட்சியின் தயவிலும் ஆட்சி நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் ஆட்சியை அமைத்த நிலையில், தனிப்பெரும்பான்மை இல்லாததால் விசிக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த சில வாரங்களாக தவெக அரசுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் வெளிப்பட்டு வருகின்றன.
குறிப்பாக பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் தொடர்பாக இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் அரசின் முடிவை விமர்சித்து வரும் நிலையில், தவெக அமைச்சர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு இடையே கருத்து மோதல் அதிகரித்துள்ளது.
இந்த சூழலில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு பதிலளித்திருந்தார். அப்போது, இடதுசாரி கட்சிகளின் ஆதரவில்தான் தவெக ஆட்சி நடைபெற்று வருவதாகவும், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் தங்களது ஆதரவைத் திரும்பப் பெற்றால் அமைச்சரவையே இருக்காது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்போது ஆதரவைத் திரும்பப் பெறுவார்கள் என ஆளுநர் காத்துக்கொண்டிருப்பதாகவும் முத்தரசன் கூறியிருந்தார். இந்தக் கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அமைச்சர் ராஜமோகன் அதற்கு பதிலளித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜமோகன், “பெண்கள், வாக்காளர்கள், மக்கள், சாமானியர்கள் தயவில்தான் இந்த ஆட்சி அமைந்துள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு மெஜாரிட்டி இல்லை. 96 இடங்களில் வெற்றி பெற்றபோதுகூட திமுக ஆட்சி அமைத்துள்ளது. எனவே யார் தயவும் யாருக்கும் தேவையில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், கூட்டணிக் கட்சிகளுடன் அதிகாரப் பகிர்வு தொடர்பாக முதலமைச்சர் விஜய் கூறியிருந்ததை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று முதலமைச்சர் சொன்னார். அதைச் செய்துள்ளார். மக்களின் தயவில்தான் ஆட்சி நடைபெறுகிறது. வேறு யாருடைய தயவிலும் ஆட்சி நடைபெறவில்லை. இந்த ஆட்சி தொடரும்” என்று ராஜமோகன் தெரிவித்தார்.
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சண்முகத்தின் அரசியல் அனுபவம் குறித்து பேசிய அவர், “சண்முகத்தின் அரசியல் அனுபவம் எங்களது வயது. ‘நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே’ என்று பேசக்கூடியவர். அவர் பேசுவது அவரது உரிமை. சண்முகம் வயதில் பெரியவர். அவர் சொல்வதில் எதை ஏற்றுக்கொள்ள முடியுமோ, அதை வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்வோம்” என்றார்.
அதேநேரத்தில், நடைமுறைக்கு எது சரியாக இருக்கிறதோ, அதை மட்டுமே அரசு எடுத்துக்கொள்ளும் என்றும் அமைச்சர் ராஜமோகன் கூறினார். சட்டப்பேரவையில் நடைபெற்றது அனைத்து கட்சிக் கூட்டம்தான் என்றும், சட்டப்பேரவைக்குள் விவாதிக்காமல் வெளியில் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று கூறுவது அரசியல் ரீதியான அணுகுமுறை என்றும் அவர் தெரிவித்தார்.
“எதை ஏற்றுக்கொள்ள முடியுமோ அதை ஏற்றுக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை பேச்சைக் குறைத்து, செயலில் காட்டி வருகிறோம். சண்முகம் தோழர் மதிப்போடும் மரியாதையோடும் சொல்லக்கூடிய விஷயங்களில் எதை ஏற்றுக்கொள்ள முடியுமோ அதை ஏற்றுக்கொள்கிறோம். அவர் சொல்வதை அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் ராஜமோகன் தெரிவித்துள்ளார்.
முத்தரசனின் “கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவில்தான் ஆட்சி நடைபெறுகிறது” என்ற கருத்துக்கு அமைச்சர் ராஜமோகன் நேரடியாக மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான இந்த கருத்து வேறுபாடு அடுத்தடுத்த நாட்களில் மேலும் விவாதத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
English Summary
Minister Rajamohan hits back at Mutharasan remark