ஒரே ஒரு ஓட்டு... தலைகீழான தலைவிதி! - திருப்பத்தூரில் தவெக வேட்பாளரிடம் அமைச்சர் பெரியகருப்பன் அதிர்ச்சி தோல்வி!
Minister Periyakaruppan suffers shocking defeat Tvk candidate Tirupattur
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அரசியல் வரலாற்றில் அரிதாகவே காணப்படும் அதிரடி திருப்பம் நிகழ்ந்துள்ளது. அமைச்சர் பெரிய கருப்பன் வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், த.வெ.க. வேட்பாளர் சீனிவாச சேதுபதி மிகச் சிறிய முன்னிலையில் வெற்றிக் களஞ்சியத்தை கைப்பற்றியுள்ளார்.

இந்தத் தொகுதியில் தி.மு.க. சார்பில் பெரிய கருப்பன், பா.ஜ.க. வேட்பாளராக திருமாறன், த.வெ.க. சார்பில் சீனிவாச சேதுபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் ரம்யா மோகன், சசிகலா அணியைச் சேர்ந்த உமாதேவி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
மேலும், 10 சுயேட்சை வேட்பாளர்களும் களமிறங்கியதால், போட்டி கடுமையாக அமைந்தது.வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது, த.வெ.க. மற்றும் தி.மு.க. இடையே நீண்ட நேரம் பரபரப்பான இழுபறி நிலை நீடித்தது.
இறுதிக்கட்டத்தில், சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை அடுத்து பெரிய கருப்பன் 83,374 வாக்குகள் பெற்று ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் பின்னடைந்தார்.
மூன்றாவது இடத்தில் பா.ஜ.க. வேட்பாளர் திருமாறன் 29,054 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியின் ரம்யா மோகன் 15,291 வாக்குகளையும், உமாதேவி 611 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
2006-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நான்கு தேர்தல்களில் தி.மு.க. வெற்றி பெற்ற வலுவான கோட்டையாக இருந்த இந்தத் தொகுதியில், இம்முறை த.வெ.க. வெற்றி பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
English Summary
Minister Periyakaruppan suffers shocking defeat Tvk candidate Tirupattur