‘இயக்கத்திற்காகவே வாழ்ந்த மனிதர்’...! - நல்லகண்ணுவுக்கு முதலமைச்சர் உருக்கமான அஞ்சலி...!
man who lived movement Chief Minister pays heartfelt tribute Nallakannu
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவராகப் போற்றப்பட்ட ஆர். நல்லகண்ணு (101), வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினையால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் 1.55 மணியளவில் காலமானார்.
அவரது மறைவு அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.“எனக்கு ஒரு கண்ணில் பார்வை குறைந்திருந்தாலும், என் அகத்தில் இன்னொரு கண் இருக்கிறது; அது நல்லகண்ணு” என்று மு. கருணாநிதி பாராட்டிய அளவிற்கு உயர்ந்த மனிதநேயத் தலைவர் நல்லகண்ணு.
நாட்டின் விடுதலைக்கும், பாட்டாளி மக்களின் உரிமைகளுக்கும் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த சமரசமற்ற போராளி என்றும் அவர் குறிப்பிட்டார்.சிறை, சித்திரவதை, துன்பங்கள் என எத்தனை சோதனைகள் வந்தாலும் கொள்கை உறுதியை ஒருபோதும் குலைக்காமல் செங்கொடியின் மரியாதையை காத்தவர்.
உள்ளத்தில் கொள்கைத் தீ எரிந்தபோதும், முகத்தில் அமைதியான புன்னகையுடன் நடந்த அரசியல் எரிமலை அவர் என முதல்வர் புகழாரம் சூட்டினார்.திராவிட இயக்கத்துடனும், பொதுவுடைமைக் கருத்தியலுடனும் நெருங்கிய நட்புறவை பேணிய நல்லகண்ணு, அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் கலைஞருடன் தோள் கொடுத்து நின்றவர் என்றும் நினைவுகூர்ந்தார்.
அவரது தன்னலமற்ற சேவையை மதித்து, கலைஞர் ஆட்சியில் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டதையும், திராவிட மாடல் அரசின் சார்பில் ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கிய பெருமை தமக்குக் கிடைத்ததாகவும் தெரிவித்தார்.பெற்ற அனைத்து விருதுகளின் தொகையையும் கட்சிக்கும், மக்களுக்கும் அர்ப்பணித்த அப்பழுக்கற்ற தலைவர் என்றும், இயக்கத்திற்காகவே வாழ்ந்த அரிய மனிதர் என்றும் அவர் தெரிவித்தார்.
நல்லகண்ணுவின் மறைவால் துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதல்வர், அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
man who lived movement Chief Minister pays heartfelt tribute Nallakannu