தமிழகத்தின் புதிய ஆளுநராக கிரண் குமார் ரெட்டி? மத்திய அரசு ஆலோசனை என தகவல்! யார் இந்த நல்லாரி கிரண் குமார் ரெட்டி?
Kiran Kumar Reddy to be the new Governor of Tamil Nadu Reports suggest the Central Government is considering this Who is Nallari Kiran Kumar Reddy
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் செயல்பட்டு வரும் நிலையில், தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் நல்லாரி கிரண் குமார் ரெட்டியை தமிழக ஆளுநராக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2026-ம் ஆண்டு மார்ச் வரை பதவி வகித்தார். அதன் பின்னர் அவர் மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டார். தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படாத நிலையில், கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூடுதல் பொறுப்பாக தமிழக ஆளுநர் பணியையும் கவனித்து வருகிறார்.
முதல்வர் விஜய் மற்றும் அவரது அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்ததும் அர்லேகர்தான். இந்நிலையில், சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநரை நியமிக்கும் பணிகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், ஆந்திராவின் முன்னாள் முதல்வர் நல்லாரி கிரண் குமார் ரெட்டியின் பெயர் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக பதவி வகித்த கிரண் குமார் ரெட்டி, நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை ஆந்திர சட்டப்பேரவை சபாநாயகராகவும் பணியாற்றினார்.
அதன்பின்னர், 2010-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக பொறுப்பேற்ற அவர், 2014-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி வரை அந்தப் பதவியில் இருந்தார்.
ஆந்திரப் பிரதேசத்தைப் பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதற்கு கிரண் குமார் ரெட்டி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். தெலங்கானா உருவாக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசமே தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்தார். இதையடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதன்பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கிரண் குமார் ரெட்டி, 2014-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி 'ஜெய் சமைக்யாந்திரா' என்ற கட்சியைத் தொடங்கினார். ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தை வலியுறுத்தி தொடங்கப்பட்ட இந்தக் கட்சி தேர்தல்களில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை. இதனால் 2018-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி கட்சியை கலைத்தார்.
பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்த கிரண் குமார் ரெட்டி, சில ஆண்டுகள் அக்கட்சியில் செயல்பட்டார். 2023-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில், தற்போது தமிழக ஆளுநர் பதவிக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. இருப்பினும், இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இது உறுதி செய்யப்படாத தகவலாகவே உள்ளது.
English Summary
Kiran Kumar Reddy to be the new Governor of Tamil Nadu Reports suggest the Central Government is considering this Who is Nallari Kiran Kumar Reddy