தலைமை நீதிபதி மீது தாக்குதல்: 'நீதித்துறையை அச்சுறுத்தும் சனாதனவாதிகளின் அராஜகம்': கி.வீரமணி கண்டனம்..!
K Veeramani condemns attack on Chief Justice
உச்ச நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி கவாயை, ராஜேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் தாக்க முயன்றுள்ளதோடு, அவர் மீது காலணியை வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதியை தாக்க முயன்ற நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். அத்துடன், அவரை சஸ்பெண்ட் செய்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது காலணி வீச்சா? ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் தொடர்ந்து அவருக்கு அவமதிப்புகள் செய்யப்படுவதா? நீதித்துறையை அச்சுறுத்தும் சனாதனவாதிகளின் அராஜகம்!
இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது, மாண்பமை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள் மீது காலணி வீச முயற்சிக்கப்பட்டுள்ளது. காலணி வீச முயன்ற வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் “சனாதன தர்மத்துக்கு இழுக்கு ஏற்படுவதை அனுமதிக்க முடியாது” என்று கூச்சலிட்டபடி இச் செய்கையில் ஈடுபட்டுள்ளார்.
சனாதன ஹிந்துத்துவக் கும்பலின் செயல்கள் எவ்வளவு கீழிறக்கத்துக்கும் செல்லும் என்பது நமக்குப் புதிதல்ல. ஆனால், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றது முதல் மாண்பமை பி.ஆர்.கவாய் மீது வன்மத்தைக் கக்கியபடியே இருக்கின்றனர்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தவராகவும், முற்போக்குச் சிந்தனை படைத்தவராகவும் திகழும் மாண்பமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள் பதவியேற்ற பின் முதல்முறையாக மகாராஷ்டிரத்துக்குப் போயிருந்தபோதும், அரசு முறைப்படி அவருக்குத் தரப்பட வேண்டிய மரியாதையைத் தராமல் அவமதித்தனர்.
அவர் முறையாக அரசியலமைப்புச் சட்டப்படி நடக்கிறார் என்றதும் ஹிந்துத்துவ பாசிச சக்திகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அந்தக் காலணி அவர் மீது மட்டும் வீசப்பட்ட காலணி அல்ல; இந்திய நீதித்துறையை அச்சுறுத்துவதற்காக வீசப்பட்ட காலணி ஆகும். தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள் அடுத்த மாதம் ஓய்வு பெறவிருக்கிறார். அவருக்குப் பின்னும் வருவோரை அச்சுறுத்தவே இந்த முயற்சி!
நீதிபதிகளே ஆயினும் தங்கள் ஆதிக்கத்துக்கு எதிராக எதையும் நீதிமன்றங்கள் செய்தால், அவர்களை அவமானப்படுத்துவோம் என்று அச்சுறுத்தும் இந்தச் செயல் தனிப்பட்டது அல்ல; இதன் பின்னணியில் இருக்கும் அமைப்புகள் யார் என்பதைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், மிகுந்த பெருந்தன்மையுடனும், பொறுமையுடனும் “கவனத்தைச் சிதறவிடாதீர்கள்; இது என்னைப் பாதிக்காது” எனக் கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்குரைஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக்கொண்ட பக்குவமும் பெருந்தன்மையும், எத்தனையோ அவமதிப்புகளைச் சந்தித்து, உயர்ந்த நிலைக்கு வந்திருப்பவர் அவர் என்பதற்குச் சான்று ஆகும். 'சனாதன அவமதிப்பு’ என்ற கூக்குரல் மூலம் இதன் பின்னணியில் எந்தத் தத்துவம் இருக்கிறது என்பது மிக வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மீதான இந்த அவமதிப்பு முயற்சி கடும் கண்டனத்துக்கு உரியதாகும். நீதித் துறையை அச்சுறுத்தும் போக்கு ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாதது. இந்த அநாகரிக, ஜாதித் திமிர் பிடித்த சனாதனவாதிகளை மக்கள் அடையாளம் கண்டு ஒதுக்கித் தள்ள வேண்டும்.
மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
உச்ச நீதிமன்றத்திற்குள் மாண்புமிகு தலைமை நீதிபதி திரு. பி. ஆர். கவாய் மீது நடத்தப்பட்ட வெட்கக்கேடான செயல் நமது ஜனநாயகத்தின் மிக உயர்ந்த நீதித்துறை அலுவலகத்தின் மீதான தாக்குதலாகும், மேலும் இது கடுமையான கண்டனத்திற்கு உரியது.
மாண்புமிகு தலைமை நீதிபதி கருணை, அமைதி மற்றும் பெருந்தன்மையுடன் பதிலளித்த விதம் அந்த நிறுவனத்தின் வலிமையைக் காட்டுகிறது, ஆனால், அது அந்த சம்பவத்தை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள வைக்காது. தாக்குதலாளி தனது செயலுக்கான காரணத்தை வெளிப்படுத்தியிருப்பது, நமது சமூகத்தில் அடக்குமுறை மற்றும் படிநிலை மனநிலை இன்னும் எவ்வளவு ஆழமாக நீடிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
நமது நிறுவனங்களை மதிக்கும் மற்றும் பாதுகாக்கும் மற்றும் நமது நடத்தையில் முதிர்ச்சியைக் காட்டும் ஒரு கலாச்சாரத்தை நாம் வளர்க்க வேண்டும்.' என்று அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இவரை தொடர்ந்து காங்கிரஸ் சோனியா காந்தியின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
'காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி கவாய் மீது நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க வார்த்தைகள் இல்லை. இது அவர் மீதான தாக்குதல் அல்ல. அரசியலமைப்பு மீதான தாக்குதல். கவாய் கருணை உள்ளவர். இந்த நேரத்தில் தேசம் அவருக்க ஆதரவாக உறுதியுடன் நிற்க வேண்டும்.' என்று கூறியுள்ளார்.
English Summary
K Veeramani condemns attack on Chief Justice