கட்சி சீரமைப்புக்கு தயாராகிறாரா விஜய்?புஸ்ஸி ஆனந்த்,ஆதவ், நிர்மல்குமார் பதவியை கலைக்கும் விஜய்?
Is Vijay preparing for party restructuring Will Vijay dismiss Pussy Anand Aadhav and Nirmal Kumar
தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிரடி மாற்றங்கள் நடைபெறவுள்ளன. கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி. நிர்மல் குமார், ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோரின் பொறுப்புகளை அடியோடு கலைக்கும் முடிவுக்கு கட்சி தலைவர் விஜய் வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என கட்சித் தரப்பில் பேசப்படுகிறது.
2024-ஆம் ஆண்டு தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பத்திலிருந்தே அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கட்சித் தலைவராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், புஸ்ஸி ஆனந்த் பொதுச் செயலாளராக, சி.டி. நிர்மல் குமார் இணை பொதுச் செயலாளராக, ஆதவ் அர்ஜுனா தேர்தல் பிரச்சார பிரிவின் பொதுச் செயலாளராகவும், ஜான் ஆரோக்கியசாமி அரசியல் வியூக வகுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
ஆனால் இந்நியமனங்கள் சில மாதங்களிலேயே சர்ச்சைக்குரியதாக மாறின. புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்குள் ஈகோ மோதல்கள் உருவாகி, அதனை வெளிப்படுத்தும் ஆடியோ பதிவுகளும் சமூக வலைதளங்களில் பரவியன. இதனால் கட்சியின் உள்துறை ஒற்றுமை கேள்விக்குள்ளானது.
அதோடு, பதவி வழங்கலில் பணமும், சமூக பின்னணியும் பார்த்து தீர்மானிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் புஸ்ஸி ஆனந்த் மீது எழுந்தது. நிர்வாகிகளிடமிருந்து பதவிக்காக ரூ.15 லட்சம் வரை வசூலித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. உண்மையாக உழைக்கும் தொண்டர்களை விஜய்க்கு அறிமுகப்படுத்தாமல், பணக்கார நிர்வாகிகளையே முன்னிலைப்படுத்தினார் என்ற விமர்சனங்களும் கட்சிக்குள் வலுப்பெற்றன.
கரூர் கூட்ட நெரிசல் நிகழ்வுக்குப் பிறகு புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானது, கட்சித் தொண்டர்களின் அதிருப்தியை மேலும் அதிகரித்தது. “ஒரு வழக்குக் கூட தாங்காமல் ஓடியவர்களால் தொண்டர்களை எப்படி காப்பது?” என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.
இந்தநிலையில், விஜய் ஆலோசனைக்காக வெங்கட்ராமன் மற்றும் அருண்ராஜ் ஆகியோருடன் பேசியுள்ளார் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுடன் வீடியோ கால் மூலமாக நேரடியாக தொடர்பு கொண்டதும் அவர்கள்மூலமே நடந்தது என்றும் கூறப்படுகிறது.
தவெக தொண்டர்களிடையே, “புஸ்ஸி ஆனந்தை நம்பி கட்சியை தொடங்கிய விஜய் ஏமாற்றப்பட்டுவிட்டார்” என்ற கருத்து பரவி வருகிறது. இதனையடுத்து, விஜய் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் பொறுப்புகளை கலைத்து, புதிய தலைமையை அமைக்கும் முடிவுக்கு வந்துள்ளார் என கட்சி வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
அரசியல் வல்லுநர்கள் கூறுவது —“இது விஜயின் முக்கியமான திருப்புப்புள்ளி. கட்சியின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், தொண்டர்களின் ஆதரவை உறுதிசெய்யவும் இது அவசியமான கட்டளை” என்று.
தவெக தலைமைக் குழுவில் அதிரடி மாற்றங்கள் நடைபெறுவது உறுதி —அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் நேரமே ரசிகர்களும் அரசியல் வட்டாரமும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
English Summary
Is Vijay preparing for party restructuring Will Vijay dismiss Pussy Anand Aadhav and Nirmal Kumar