வேலை தேடுவது ஆடம்பரமா...? வேலைவாய்ப்புச் சேவைகள் மீதான 18% ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்...! - வேல்முருகன் வலியுறுத்தல்
Is looking for job luxury central government should reconsider 18 percentage GST tax employment services Velmurugan insists
வேலை தேடும் இளைஞர்களையும், பணியாளர்களைத் தேடும் நிறுவனங்களையும் இணைக்கும் வேலைவாய்ப்பு சார்ந்த சேவைகளுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது,"ஒரு இளைஞர் வேலை தேடுவது ஆடம்பரத்துக்காக அல்ல.
குடும்பத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், கல்விக்காக பெற்ற கடனை திருப்பிச் செலுத்தவும், தனது வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்ளவும் வேலை தேடுகிறார்.அப்படிப்பட்ட வேலைவாய்ப்பை நோக்கிய பயணத்தில், வேலை தேடுபவர்களையும் பணியாளர்களைத் தேடும் நிறுவனங்களையும் இணைக்கும் சேவைகளுக்கு வரி விதிக்கப்படுவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பணியாளர்களைத் தேடுதல், வேலைவாய்ப்புக்குப் பரிந்துரை செய்தல், தொழிலாளர்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ஜி.எஸ்.டி. விதிகளின் கீழ் தனித்தனி பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. நிரந்தரப் பணியமர்த்தல், ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர் வழங்கல், தற்காலிகப் பணியாளர் வழங்கல் உள்ளிட்ட சேவைகளும் இதில் அடங்குகின்றன.
ஜி.எஸ்.டி. வரி விகித அட்டவணையில் 9985-ஆம் வகைப்பாட்டின் கீழ் இடம்பெறும் பொதுவான ஆதரவுச் சேவைகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.வேலை தேடும் இளைஞர்களையும், வேலை வழங்கும் நிறுவனங்களையும் இணைக்கும் ஆட்சேர்ப்பு மற்றும் பணியாளர் வழங்கல் சேவைகளுக்கு வரி விதிக்கப்படும் நிலையில், அந்தக் கூடுதல் செலவு வேலைவாய்ப்பு சந்தையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டாமா?
வேலைவாய்ப்பை அதிகரிப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் நிலையில், வேலை தேடுபவரையும் வேலை வழங்குபவரையும் இணைக்கும் அமைப்புகளும் தடையின்றி செயல்பட வேண்டியது அவசியம்.வேலை கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய சூழலில், அந்த வாய்ப்பைத் தேடிச் செல்லும் பாதையிலும் கூடுதல் செலவு ஏற்படுவது எந்த வகையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்?
இளைஞர்களின் கைகளில் கல்விச் சான்றிதழ்கள் இருப்பது மட்டும் போதாது. அவர்களுக்கு வேலை வேண்டும். நிலையான வருமானம் வேண்டும். பாதுகாப்பான எதிர்காலம் வேண்டும்.அந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் முயற்சியில் தேவையற்ற செலவுகள் தடையாக மாறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
எனவே, வேலைவாய்ப்பு சார்ந்த சேவைகளுக்கான ஜி.எஸ்.டி. வரிக் கட்டமைப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.வேலை தேடும் தலைமுறையின் சுமையை மேலும் அதிகரிப்பதற்குப் பதிலாக, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருளாதாரச் சூழலை வலுப்படுத்துவதில் மத்திய அரசின் கவனம் இருக்க வேண்டும்.
இளைஞர்களின் கைகளில் வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் மட்டுமின்றி, பணிநியமன ஆணைகளும் கிடைக்க வேண்டும்.இதற்கேற்ற வகையில், ஆட்சேர்ப்பு மற்றும் பணியாளர் வழங்கல் சேவைகளுக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வரிச்சூழலை மாற்றியமைக்க வேண்டும்.வேலை தேடும் இளைஞர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தாமல், அவர்களுக்கான வேலைவாய்ப்பு வாய்ப்புகள் விரிவடையும் வகையில் கொள்கை முடிவுகள் அமைய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.இவ்வாறு வேல்முருகன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Is looking for job luxury central government should reconsider 18 percentage GST tax employment services Velmurugan insists