தவெக துணைத் தலைவர் பதவிக்கு ஜான் ஆரோக்கியசாமி குறி? விஜய்யின் அடுத்த மூவ்.. ஆதவ் அர்ஜுனா தரப்பு அதிருப்தி? - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற ஜான் ஆரோக்கியசாமி காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே முதல்வர் விஜய்யுடன் அமைச்சரவை கூட்டங்களில் பங்கேற்று வருவதாக சர்ச்சையில் சிக்கியுள்ள அவர், அடுத்ததாக கட்சியிலும் முக்கிய அதிகாரம் கொண்ட பதவியை பெற தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் விஜய்யின் நண்பர் விஷ்ணு ரெட்டி மற்றும் தவெகவின் தேர்தல் வியூக ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரத்தை கையில் எடுத்த திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து புகார் அளித்தன.

அமைச்சரவை கூட்டம் என்பது அரசின் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் இடம் என்பதால், அரசுப் பொறுப்பில் இல்லாதவர்கள் அதில் பங்கேற்றார்களா என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பின. இதனால் விஷ்ணு ரெட்டி மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரின் பெயர்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் பேசுபொருளாகின.

ஏற்கனவே முதல்வர் விஜய்யின் தனிச்செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி இருந்து வருகிறார். அவரது நியமனத்தின்போதே பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது விஷ்ணு ரெட்டி மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது தவெக அரசுக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது.

ஆனால் இந்த விவகாரம் குறித்து முதல்வர் விஜய் இதுவரை வெளிப்படையாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில்தான் திரைமறைவில் வியூகங்களை வகுத்து வந்த ஜான் ஆரோக்கியசாமி, நேரடி அரசியலுக்குள் நுழைய காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் துணைத் தலைவர் பதவியை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஜான் ஆரோக்கியசாமி ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

தவெக தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை துணைத் தலைவர் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை. கட்சியின் தலைவராக விஜய்யும், பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்தும் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ஆதவ் அர்ஜுனா தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளராக முக்கிய அதிகார மையமாக உருவெடுத்துள்ளார்.

விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அரசு நிர்வாகத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதால், கட்சியின் அன்றாட நடவடிக்கைகளை பெரிய அளவில் நேரடியாக கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கட்சியின் செயல்பாடுகள் பெரும்பாலும் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் பொறுப்பில் விடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முக்கிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் மாவட்ட அளவிலான பொறுப்புகள் மட்டும் விஜய்யுடன் ஆலோசிக்கப்பட்ட பிறகு அறிவிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில்தான் விஜய்யின் நீண்டகால நம்பிக்கைக்குரிய வியூக ஆலோசகராக கருதப்படும் ஜான் ஆரோக்கியசாமியை கட்சியின் துணைத் தலைவராக நியமிப்பதன் மூலம், தவெகவின் அமைப்பு ரீதியான கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த முடியும் என்று விஜய் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் காலத்தில் தவெகவின் முக்கிய அரசியல் வியூகங்களை வகுப்பதில் ஜான் ஆரோக்கியசாமி முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது. தற்போது ஆட்சி அமைந்த பிறகும் விஜய்யின் முக்கிய ஆலோசனைகளில் அவர் தொடர்ந்து இடம்பெற்று வருவதால், அவருக்கு அதிகாரப்பூர்வமான கட்சிப் பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆனால் ஜான் ஆரோக்கியசாமி நேரடியாக தவெகவில் இணைந்து முக்கிய பதவியை பெறுவதை ஆதவ் அர்ஜுனா தரப்பு ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே கட்சிக்குள் பல்வேறு அதிகார மையங்கள் உருவாகி வருவதாக பேச்சுகள் உள்ளன. புஸ்ஸி ஆனந்த் ஒரு பக்கம், ஆதவ் அர்ஜுனா மற்றொரு பக்கம் என கட்சியின் முக்கிய முடிவுகளில் செல்வாக்கு செலுத்தி வரும் நிலையில், ஜான் ஆரோக்கியசாமியும் துணைத் தலைவராக வந்தால் புதிய அதிகார மையம் உருவாகும் என்று கருதப்படுகிறது.

குறிப்பாக விஜய்யிடம் நேரடியாக பேசும் வாய்ப்பும், அவரது முழு நம்பிக்கையும் ஜான் ஆரோக்கியசாமிக்கு இருப்பதாக கூறப்படுவதால், அவர் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டால் கட்சியின் முக்கிய முடிவுகளில் மிகப்பெரிய செல்வாக்கை செலுத்த வாய்ப்புள்ளது.

இதுதான் ஆதவ் அர்ஜுனா தரப்பின் அதிருப்திக்கு முக்கிய காரணமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஏற்கனவே மாற்றுக் கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படுவது, பழைய நிர்வாகிகளின் அதிருப்தி, மாவட்டச் செயலாளர் நியமனங்களில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் என தவெகவில் உட்கட்சிப் பூசல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் ஜான் ஆரோக்கியசாமியின் நேரடி அரசியல் என்ட்ரி, கட்சியின் தலைமையிலேயே புதிய அதிகார மோதலை உருவாக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியின் கட்டமைப்பை விரைவாக வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் விஜய் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அரசு நிர்வாகத்தை விஜய் கவனிக்கும் நிலையில், கட்சியை முழுநேரமாக கவனிக்க நம்பிக்கைக்குரிய ஒருவர் தேவை என்ற எண்ணம் தவெக தலைமையில் இருப்பதாக தெரிகிறது.

இதனால் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே ஜான் ஆரோக்கியசாமியை அதிகாரப்பூர்வமாக கட்சிக்குள் கொண்டு வந்து, துணைத் தலைவர் அல்லது அதற்கு இணையான முக்கிய பொறுப்பை வழங்கும் முடிவை விஜய் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஜான் ஆரோக்கியசாமிக்கு துணைத் தலைவர் பதவி கிடைக்குமா, ஆதவ் அர்ஜுனா தரப்பின் எதிர்ப்பு எந்த அளவுக்கு இருக்கும், அல்லது புதிய அதிகார சமநிலையை உருவாக்க விஜய் வேறு முடிவை எடுப்பாரா என்பதுதான் தவெகவின் அடுத்தகட்ட அரசியலில் முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is John Arokiasamy eyeing the TVK Vice President post Vijay next move Is the Aadav Arjuna camp dissatisfied


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->