பதவிக்கு உட்கட்சி தேர்தல்! ஸ்டாலின் எடுத்த மிகப்பெரிய முடிவு! அத்தை கனிமொழி ஜெயிச்சுட்டாங்க..கடும் அப்செட்டில் உதயநிதி ஸ்டாலின்!
Intra party election for the post A major decision taken by Stalin Aunt Kanimozhi has won Udhayanidhi Stalin is deeply upset
2026 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, திமுகவில் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, கட்சியின் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 77-ல் இருந்து 110 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரின் மாறுபட்ட நிலைப்பாடுகள் கட்சிக்குள் பேசுபொருளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாக மாறியதுடன், அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினே தனது கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தார். மேலும், அமைச்சர்கள் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகளும் தேர்தலில் தோல்வியை சந்தித்தனர். இதையடுத்து தோல்விக்கான காரணங்களை ஆராய குழுக்கள் அமைக்கப்பட்டதுடன், கட்சியின் அமைப்பையும் மறுசீரமைக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
திமுகவின் உள்கட்டமைப்பு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில், சில மாவட்டச் செயலாளர்கள் கட்சியில் அதிக அதிகாரம் செலுத்துவதாகவும், அவர்களின் செயல்பாடுகள் பல தொகுதிகளில் தேர்தல் தோல்விக்கு காரணமாக அமைந்ததாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாவட்டங்களைப் பிரித்து, கட்சிப் பணிகளை மேலும் பரவலாக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
அதன்படி, மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை 77-ல் இருந்து 110 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இதனால் பல ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர் பதவியில் இருக்கும் மூத்த நிர்வாகிகளுக்கும், புதிதாக பொறுப்பை கைப்பற்ற விரும்பும் இளம் நிர்வாகிகளுக்கும் இடையே போட்டி உருவாகியுள்ளது.
இந்த சூழலில், மாவட்டச் செயலாளர் பதவிகளை கைப்பற்றுவதில் திமுகவின் இளைஞரணி முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக புதிதாக உருவாக்கப்படும் 33 மாவட்டங்களுக்கு இளைஞரணியைச் சேர்ந்தவர்களை மாவட்டச் செயலாளர்களாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், மாவட்டச் செயலாளர்களை மேலிடத்தின் மூலம் நியமிப்பதைவிட, கட்சிக்குள் தேர்தல் நடத்தி தொண்டர்களின் ஆதரவுடன் நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதே கனிமொழியின் நிலைப்பாடாக இருந்ததாக கூறப்படுகிறது. கட்சியின் அடிமட்டத்தில் செல்வாக்கு பெற்றவர்கள் மட்டுமே மாவட்டச் செயலாளர் பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக உட்கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மாவட்டங்களை மறுசீரமைப்பது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்டச் செயலாளர்கள் உட்கட்சி தேர்தல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாவட்டச் செயலாளர் நியமனத்தில் நேரடி நியமனத்தை விட தேர்தல் முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
திமுகவில் மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தல் நடத்தப்படுவது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெற உள்ள முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. தொண்டர்களிடம் நேரடியாக செல்வாக்கு பெற்ற நிர்வாகிகளைத் தேர்வு செய்வதன் மூலம் கட்சியை மீண்டும் அடிமட்டத்தில் இருந்து வலுப்படுத்த முடியும் என திமுக தலைமை கருதுவதாக கூறப்படுகிறது.
இதனால், உதயநிதி ஸ்டாலின் தரப்பின் நேரடி நியமன கோரிக்கைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், கனிமொழி தரப்பின் தேர்தல் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளதாகவும் கட்சிக்குள் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக உதயநிதி தரப்பு அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனினும், மாவட்டச் செயலாளர் தேர்தல் நடைபெறும் நிலையில், யாருக்கு கட்சித் தொண்டர்களின் ஆதரவு கிடைக்கிறது என்பதே அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் முக்கியத்துவம் பெறும். புதிய மாவட்ட அமைப்பும், உட்கட்சி தேர்தலும் திமுகவின் எதிர்கால அதிகார சமநிலையை எந்த அளவுக்கு மாற்றப்போகிறது என்பதுதான் தற்போது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Intra party election for the post A major decision taken by Stalin Aunt Kanimozhi has won Udhayanidhi Stalin is deeply upset