மழைநீர் தேங்கினால் உடனடியாக நடவடிக்கை...! சென்னை திரு.வி.க. நகரில் அமைச்சர் அருண்ராஜ் விடிய விடிய நேரில் ஆய்வு...!
Immediate action if rainwater accumulates Minister Arunraj inspects ThiruVK Nagar Chennai every morning
வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகளால் தமிழ்நாட்டில் மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வரும் 26-ஆம் தேதி வரை தொடர்ந்து ஆறு நாட்களுக்குக் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வரும் 23-ஆம் தேதி வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, சென்னையில் நேற்று இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, சென்னை திரு.வி.க. நகர் மண்டலத்தில் மழைநீர் தேக்கத்தைத் தவிர்க்க மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கைப் பணிகளை அமைச்சர் அருண்ராஜ் இன்று அதிகாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வீனஸ் நகர் நீர் இறைக்கும் அறை, பெரம்பூர் சுரங்கப்பாதை உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆய்வு நடத்திய அவர், நீரை வெளியேற்றும் மோட்டார் பம்புகளை எந்நேரமும் செயல்படத் தயாராக வைத்திருக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மழைநீர் தேங்கத் தொடங்கியவுடன் தாமதமின்றி அதை வெளியேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.தொடர்ந்து அங்காளம்மன் கோவில் தெரு, டெமலஸ் சாலை, டானா தெரு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களின் செயல்பாடுகள் மற்றும் நீரை வெளியேற்றும் பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதைத் தடுப்பதுடன், சாலைகளில் மழைநீர் தேங்குவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
English Summary
Immediate action if rainwater accumulates Minister Arunraj inspects ThiruVK Nagar Chennai every morning