பெரம்பூர் வாக்காளர்களைக் குழப்ப 2 விஜய் மற்றும் 2 ஜோசப்... வேட்புமனுக்களை ஏற்பு!
Identity Tactics in Perambur Two Vijays and Two Josephs on the Ballot
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் நட்சத்திரத் தொகுதியாகச் சென்னை பெரம்பூர் உருவெடுத்துள்ளது. இதற்குக் காரணம், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் இத்தொகுதியில் களம் காண்பதுதான். இன்று (ஏப்ரல் 7, 2026) நடைபெற்ற வேட்புமனுப் பரிசீலனைக்குப் பிறகு வெளியாகியுள்ள வேட்பாளர் பட்டியல், அரசியல் வட்டாரத்தில் ஒரு சுவாரசியமான விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தவெக தலைவர் விஜய்யைப் போன்றே பெயருள்ள வேட்பாளர்கள் இத்தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
பெயர் குழப்ப அரசியல்:
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பெரம்பூர் தொகுதியில் 'விஜய்' என்ற பெயரில் தவெக தலைவர் உட்பட இரண்டு பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். அதேபோல், விஜய்யின் முழுப் பெயரான ஜோசப் விஜய்யைக் குறிவைக்கும் விதமாக, 'ஜோசப்' என்ற பெயரில் மேலும் இரண்டு பேர் தனித்துப் போட்டியிடக் களம் இறங்கியுள்ளனர். ஆக மொத்தம், வேட்பாளர் பட்டியலில் இரண்டு 'விஜய்'களும், இரண்டு 'ஜோசப்'களும் இடம்பெற்றுள்ளனர்.
வாக்காளர்களைக் கவரவா அல்லது குழப்பவா?
தமிழக அரசியலில் ஒரு பலமான வேட்பாளருக்கு எதிராக அதே பெயருடைய ‘டமி’ வேட்பாளர்களைக் களமிறக்குவது என்பது ஒரு பழைய தேர்தல் தந்திரமாகும். இதன் மூலம் வாக்காளர்களைக் குழப்பி, அவர்களின் வாக்குகளைச் சிதறடிக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பது வழக்கம். குறிப்பாக, முதல்முறை தேர்தலைச் சந்திக்கும் விஜய்க்கு எதிராக இத்தகைய 'பெயர் குழப்ப' வியூகம் பெரம்பூரில் கையாளப்பட்டுள்ளது, அந்தத் தொகுதியின் தேர்தல் போட்டி எந்தளவுக்குக் கடுமையாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.
ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பெரம்பூரில் களம் காணும் ஒவ்வொரு வேட்பாளரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய்யின் வேட்புமனு இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக இத்தகைய மறைமுகத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இருப்பினும், "சின்னங்கள் ஒதுக்கப்படும்போது இந்தத் தந்திரங்கள் எடுபடாது" என்று தவெக தொண்டர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது, மக்கள் சரியான 'விஜய்'-ஐத் தேர்ந்தெடுத்தார்களா அல்லது இந்தக் குழப்பம் வாக்குகளில் பாதிப்பை ஏற்படுத்தியதா என்பது தெரிந்துவிடும்.
English Summary
Identity Tactics in Perambur Two Vijays and Two Josephs on the Ballot