தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் 02 நாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு தொடங்கியது..!
IAS and IPS officers conference begins under the leadership of Chief Minister Vijay
முதல்வர் விஜய் தலைமையில் 02 நாள் கொண்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு இன்று தொடங்கியுள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் IAS, IPS அதிகாரிகள் மாநாடு தற்போது நடக்கிறது. இதில் 28 துறைகளின் செயல்திட்டங்கள், வெற்றி தமிழகம் திட்டம் குறித்தும் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த மாநாட்டில் ஆட்சியர்கள், காவல்துறை உயரதிகாரிகளுடனான மாநாடு 03 அமர்வுகளாக நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் இணைந்து கலந்து கொள்கின்ற இந்த அமர்வில் முதலில் சட்டம் ஒழுங்கு தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆய்வு, குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடக்கும் நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள், போலீஸ் நிர்வாகத்தின் பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து இந்த மாநாட்டில் ஆய்வு செய்யப்படவுள்ளது.
அத்துடன், பெண்கள் பாதுகாப்பு, சிங்கப்பெண் அதிரடிப்படையின் செயல்பாடுகள், போக்சோ வழக்குகளின் நிலை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் இல்லாத தமிழகம், திட்டங்களின் நிலை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. தொடர்ந்து தமிழக அரசின் திட்டங்கள் மக்களுக்கு முறையாக சென்றடைகிறதா? உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் மாநாட்டில் முதல்வர் விஜய் ஆலோசிக்கவுள்ளார்.

02 நாட்களாக நடக்கும் இந்த அமர்வில் ஆட்சியர்கள் மற்றும் ஐ.எப்.எஸ். அதிகாரிகள் இணைந்து ஆய்வு மேற்கொள்கின்றனர். இந்த அமர்வுகளில் நிறைவில் முதல்வர் விஜய் உரையாற்றவுள்ளார் . அப்போது திறமையாக செயல்பட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளை பாராட்டி பரிசுகளை வழங்கவுள்ளார்.
English Summary
IAS and IPS officers conference begins under the leadership of Chief Minister Vijay