“அதிமுகவை விட்டு வெளியேற மாட்டேன்; எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பது நோக்கமில்லை!” – எஸ்.பி.வேலுமணி அதிரடி விளக்கம் - Seithipunal
Seithipunal


மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் அதிமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரள்வதாகவும், வேலுமணி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாகவும் தகவல்கள் பரவின. இந்தச் சூழலில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, அதிமுகவை விட்டு வெளியேறும் எண்ணம் தமக்கு இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக என்பது எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரால் வளர்க்கப்பட்ட இயக்கம். 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி இது. எங்கள் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம். எங்களை உருவாக்கியதே அதிமுகதான். நான் தனியாகக் கூட்டம் நடத்துவதாகப் பத்திரிகைகள்தான் செய்தி வெளியிடுகின்றன. நான் யாரையும் தனியாகச் சந்திக்கவில்லை. நிர்வாகிகள் அன்புடன் சந்திப்பது இயல்பான ஒன்றுதான். சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் வருவதும் இயல்பானதுதான்” என்று விளக்கமளித்தார்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் தோல்வி குறித்துப் பேசிய அவர், “இந்தத் தோல்வி மிகுந்த வருத்தமளிக்கிறது. இதற்கு முன்பு இதே தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். தாராபுரம் தொகுதியில் முன்பு நான் முழுமையாகப் பணியாற்றி, 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற உதவினேன். தற்போது அதிமுகவுக்கு விழும் வாக்குகள் குறைந்திருப்பது கவலை அளிக்கிறது. இந்த முறை எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பூத்துகளில் நிர்வாகிகள் முறையாகப் பணியாற்றினர். எனக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு பூத்துகளில் அதிமுக முன்னிலை வகித்தது. கட்சிக்காக எந்தப் பணியையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.

மேலும், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், அதிமுக ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். “நான் அதிமுகவை விட்டு வெளியேற மாட்டேன். வேறு கட்சிக்குச் செல்லப் போவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. சென்னையில் இருந்தால் இதுபோன்ற செய்திகள் வெளியாகும் என்பதால் கோவைக்கு வந்துவிட்டேன். எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பது எங்கள் நோக்கமல்ல. அவர் பொதுச்செயலாளராக இருப்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. அவரைப் பற்றி விமர்சிக்கவும் தயாராக இல்லை” என்று தெரிவித்தார்.

அதேநேரத்தில், அதிமுகவின் தேர்தல் தோல்விகளுக்கான காரணங்கள் குறித்தும் எஸ்.பி.வேலுமணி தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். “அதிமுகவின் செல்வாக்கு குறைந்துவிட்டதாக நான் கருதவில்லை. எங்களுக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகள் தமிழக வெற்றிக் கழகத்துக்குச் சென்றுள்ளன. 2021 தேர்தலில் பிரிந்து சென்றவர்களை, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் ஒன்றிணைத்திருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்கலாம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்கலாம். 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்ற வாய்ப்பையும் இழந்துவிட்டோம்” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பிரிந்து சென்றவர்களையும் பிற கட்சிகளில் இணைந்தவர்களையும் மீண்டும் அதிமுகவில் ஒன்றிணைக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். “அம்மா உயிரைக் கொடுத்து வளர்த்த கட்சி இது. கட்சியை எப்படி ஒன்றிணைக்க வேண்டும் என்பது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகத் தெரியும். பிரிந்து சென்ற அனைவரையும் அவர் மீண்டும் ஒன்றிணைப்பார் என்று நம்புகிறேன்” என்றார்.

இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் உள்கட்சிப் பூசல் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், எஸ்.பி.வேலுமணியின் இந்த விளக்கம் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. ஒருபுறம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படும் நிலையில், மறுபுறம் அதிமுகவை விட்டு வெளியேறும் எண்ணமில்லை என்றும், கட்சியை ஒன்றிணைப்பதே தங்களது விருப்பம் என்றும் வேலுமணி தெரிவித்துள்ளார். இதனால் அதிமுகவில் அடுத்தகட்டமாக என்ன மாற்றங்கள் நிகழும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I will not leave the AIADMK my objective is not to oppose Edappadi Palaniswami SP Velumani emphatic clarification


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->