பாஜகவிற்கு எத்தனை தொகுதிகள்? பாஜகவின் 20% கணக்கு.. 59 தொகுதிகளை கேட்க தயாராகும் டெல்லி! விழிபிதுங்கி நிற்கும் இபிஎஸ்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு தொடர்பான இழுபறி தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, தமிழக பாஜக தரப்பில் சட்டசபைத் தொகுதிகளின் சுமார் 20 சதவிகிதத்தை கோரத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ள நிலையில், 20 சதவிகிதம் என்பது சுமார் 59 தொகுதிகளாகும். இந்த அளவிலான கோரிக்கை நடைமுறைக்கு வந்தால், கூட்டணித் தலைமையிலான அதிமுகவுக்கு கடும் நெருக்கடி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பாஜக டெல்லி தலைமையின் அழுத்தத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

தேர்தல் நெருங்குவதால், அனைத்து கட்சிகளும் தங்களின் அரசியல் வளர்ச்சியை முன்னிறுத்தி, அதிக தொகுதிகளை கைப்பற்ற முயற்சித்து வருகின்றன. அதே நேரத்தில், தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தையும் பல கட்சிகள் வெளிப்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிகளும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை சுமூகமாக முடிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்தச் சூழலில், பாஜக தரப்பு கடந்த மக்களவைத் தேர்தலின் வாக்கு சதவிகிதத்தை அடிப்படையாக வைத்து தொகுதிகளை கேட்கும் யுக்தியை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக 23 தொகுதிகளில் போட்டியிட்டு, 9 இடங்களில் இரண்டாம் இடமும், 13 இடங்களில் மூன்றாம் இடமும் பெற்றது. மொத்தமாக சுமார் 11.4 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தது. கூட்டணி அளவில் பார்க்கும்போது, பாஜக தலைமையிலான தரப்பு சுமார் 18 சதவிகித வாக்குகளை பெற்றதாக கணக்கிடப்படுகிறது. இந்த அடிப்படையில்தான், தமிழ்நாட்டில் சுமார் 20 சதவிகித தொகுதிகளை கோர பாஜக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், பாஜகவுக்கு 59 தொகுதிகளை ஒதுக்கினால், பாமக, அமமுக போன்ற பிற கூட்டணிக் கட்சிகளுக்கும் கூடுதல் இடங்களை வழங்க வேண்டிய கட்டாயம் உருவாகும். இது, ஒருகாலத்தில் திமுக 123 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட நிலையைப் போன்ற சூழலை அதிமுக எதிர்கொள்ள வேண்டிய நிலையை உருவாக்கும் என அதிமுக வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பாஜகவின் ஆரம்பக் கோரிக்கை 59 தொகுதிகளாக இருந்தாலும், பேச்சுவார்த்தையின் இறுதியில் 35 முதல் 45 தொகுதிகளைப் பெறுவதே அதன் இலக்கு என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள சுமார் 44 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் அக்கட்சி கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கான தொகுதிப் பங்கீட்டை 25 இடங்களுக்குள் முடிக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பாஜக தரப்பில் “ஒரு மாவட்டம் – ஒரு தொகுதி” என்ற திட்டமும் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் குறைந்தது ஒரு தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன், தேர்தல் பணிகளை பாஜக தீவிரப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில், பாஜக–அதிமுக கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு தொடர்பான இந்த இழுபறி, வரும் நாட்களில் மேலும் தீவிரமாகும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். பாஜக கோரிக்கைகளுக்கும், அதிமுக தலைமையின் கட்டுப்பாடுகளுக்கும் இடையிலான இந்த அரசியல் கணக்கு, கூட்டணியின் எதிர்கால வடிவத்தை தீர்மானிக்கும் முக்கிய காரியமாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How many seats will BJP have BJP 20 share Delhi is preparing to ask for 59 seats EPS is keeping a watchful eye


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->